கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது - தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சேலம்: கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 

இதனால் கடந்த 19ம் தேதி முதல் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு தலா 5 ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம் 10,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கலை வந்தடைந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மேட்டூர் அணையை அடைந்தது. 

நேற்று காலை வினாடிக்கு 686 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2,376 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக விவசாயிகள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். 

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தற்போது வினாடிக்கு 10,000  கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் நேற்று காலை 89.96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 89.36 அடியாக சரிந்தது. மேலும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 51.92 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: