என்ஆர் காங்., பாஜக அமைச்சரவை பங்கீடு முடிவுக்கு வந்தது: நாளை அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் பட்டியல் துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரியில் கடந்த 50 நாட்களாக நீடித்து வந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்தது. புதுச்சேரியில் என்ஆர் காங்., பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியேற்று இதுவரை 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. என்ஆர் காங்., பாஜக-வில் அமைச்சர்களை பிரிப்பதில் மோதல் ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து சமரசம் ஏற்பட்டதால் என்ஆர் காங்.-க்கு 3 அமைச்சர், ஒரு துணை சபாநாயகரும், அதேபோல் பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜக தரப்பில் அமைச்சர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் செய்தனர். பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜான்குமார் மாற்றப்பட்டு, தனித்தொகுதி எம்எல்ஏ சாய் சரவணகுமார் இடம்பிடித்தார். என்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்யாததாலும், அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சர் பட்டியலை நேற்று இரவு இறுதி செய்தார்.

ஆளுநர் தமிழிசையும், சென்னையில் இருந்து இன்று அதிகாலை புதுச்சேரி திரும்பினார். அதனை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி சற்று முன் ஆளுநர் தமிழிசையை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது என்ஆர் காங்., பாஜக அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். இதனையடுத்து இந்த பட்டியலை உள்துறைக்கு அனுப்ப ஒப்புதல் பெறும் வேலையில் ஆளுநர் மாளிகை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு உள்துறையில் இருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டால் அமைச்சரவை பதவியேற்பு விழா விரைவில் நடக்கும். அந்த வகையில் நாளை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories:

>