மக்களின் சேமிப்பு பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்த அஞ்சலக ஊழியர்!: பணத்தை பறிகொடுத்த மக்கள் குமுறல்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்வி, விளையாட்டு என தனது உழைப்பால் உயர்ந்து 17 வயதில் அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்த 23 வயது இளைஞரின் வாழ்வை ஆன்லைன் சூதாட்டம் சூறையாடி இருக்கிறது. அஞ்சலகத்தில் சிறுக, சிறுக சேமித்து வைத்த கிராமமக்கள் பணத்தையே அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. வீட்டு வாடகை கூட தர முடியாமல் அன்றாட வாழ்வை நகர்த்தவே அல்லாடி வந்த குடும்பத்தை சேர்ந்த இவர் அரசு பள்ளியில் பயின்று படிப்பிலும், விளையாட்டிலும் முதலாவதாக வந்தது குடும்பத்தினருக்கு ஆதரலாக இருந்தது. 10ம் வகுப்பில் பெற்ற 94 சதவீத மதிப்பெண் காரணமாக 2017ம் ஆண்டு ஒன்றிய அரசு சின்னத்திரைக்கு கிராம அஞ்சலக பணியை வழங்கியது.

இதனால் பெற்றோர் ஒருபுறம் மகிழ்ந்திருக்க ஊர் மக்களிடமும் சின்னத்துரைக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் தான் ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கன் சின்னத்துரை வாழ்வில் புகுந்து விளையாடினான். கிராமமக்கள் வைத்திருந்த அன்பு கலந்த நம்பிக்கையை காப்பாற்ற முடியாத மோசடி பேர்வழியாய் சின்னத்துரையை மாற்றிவிட்டது ஆன்லைன் சூதாட்டம். 

பொதுமக்களின் அஞ்சலக சேமிப்பு பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் சின்னத்துரை இழந்துவிட்டதால் இப்பொது அவரது வாழ்க்கை மட்டுமின்றி அப்பாவி கிராம மக்களின் சேமிப்பு பணமும் கேள்விக்குறியானது. சுமார் 50 லட்சம் ரூபாய் வரை அஞ்சலக சேமிப்பு பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் சின்னத்துரை இழந்துவிட்டதால் சிறுக சிறுக சேமித்த தொகையை இழந்து தவிக்கின்றனர் கிராமமக்கள். 

வியர்வையை சிந்தி சம்பாதித்த பணம் பறிபோனதால் கண்ணீருடன் கையை பிசைந்து நிற்கின்றனர் கிராமமக்கள். இழந்த பணத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று கிராமமக்கள் ஒருபுறம் போராட்டக்களத்தில் குதித்துள்ளதால் மற்றொரு புறம் செய்வதறியாது தவிக்கிறது சின்னத்துரையின் குடும்பம். தற்கொலையை தவிர வேறு வழியில்லை என்று விழி பிதுங்கி நிற்கும் அவர்கள், இந்த மோசடி பற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கதறுகின்றனர். 

மின்னஞ்சல், ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற நவீனங்கள் நம்பை அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முன்னெடுத்து செல்கின்றன. ஆனாலும் இதுபோன்ற நவீனங்களை ஆக்கபூர்வ வழிகளுக்கு பயன்படுத்தாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சின்னத்துரை ஒரு உதாரணம்.

Related Stories:

>