ஒன்றிய அரசு கொண்டு வரும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: 9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள துறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு 9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை தனது நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதற்காக ஒன்றிய அரசு சமீபத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் தற்போதுள்ள சிறு துறைமுகங்கள் மேலாண்மையில் மாற்றம் செய்வதற்காக ஒரு புதிய வரைவு சட்ட முன்வடிவான ‘‘இந்திய துறைமுகங்கள் மசோதா 2021’’ கொண்டுவரவுள்ளது என்று உங்களுக்கு தெரியும். இந்த மசோதா குறித்து விவாதிப்பதற்காக கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சில் கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கவுள்ளதும் தெரியவந்திருக்கும். தற்போதுள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1980ன்படி சிறு துறைமுகங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், வளர்ச்சி திட்டங்கள், அவற்றை ஒழுங்குமுறை படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவது மாநில அரசுகளிடம் இருக்கிறது. இந்த நிலையில் புதிய துறைமுக மசோதா 2021ஐ கொண்டுவந்து சிறு துறைமுகங்கள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

 கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சில் என்பது இதுவரை அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு மட்டுமே. இந்த நடவடிக்கைகள் மூலம் மாநில அரசிடம் உள்ள அதிகாரங்கள் ஒன்றிய அரசால் எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசின்கீழ் செயல்படும் சிறு துறைமுகங்கள் சிறப்பான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் சிறு துறைமுகங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும். இந்த பிரச்னை குறித்து தமிழக அரசு ஏற்கனவே மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றதுடன் சிறு துறைமுகங்களின் மேலாண்மையை நிர்வகித்துவரும் மாநில அரசுகளின் தனி உரிமையை பறிக்க கூடாது என்ற எதிர்ப்பையும் தெரிவித்துள்ளோம்.

எனவே, கடற்கரையோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீர்த்துப்போக செய்யும் எந்த நடவடிக்கையையும் தடுக்க இணைந்து செயல்பட வேண்டும். எனவே, ஜூன் 24ம் தேதி நடைபெறவுள்ள கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நமது மாநிலங்களின் எதிர்ப்பை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: