கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள மேற்கொண்ட மருத்துவ கட்டமைப்பை அகற்ற வேண்டாம்: தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம். 3வது அலை வந்தால் அதற்காக ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்று மத்திய, மாநிலஅரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.  கொரோனா 2வது அலை பரவல் தீவிரமடைந்தபோது, ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி வினியோகம் குறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.  இந்த விசாரணையில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வக்கீல் பி.முத்துக்குமார், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், வக்கீல்கள் சி.கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அரசு வக்கீல் மாலா உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 65 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. தடுப்பூசி போடும் திட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: கொரோனா 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு இதுவரை எந்த அறிவியல் பூர்வ அடிப்படையும் இல்லை. இருந்தபோதும், எதிர்காலத்தில் அதாவது இன்னும் 4லிருந்து 6 மாதங்களுக்குள் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  அதை எதிர்கொள்வதற்காக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2வது அலையை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும்.

ஆக்சிஜன் உற்பத்தியை நமக்கு தேவைக்கு அதிகமான அளவில் அதிகரிக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டாம். தடுப்பூசி மருந்து வினியோகத்தை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், புதுச்சேரி அரசும் எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு உதவிய அனைத்து வக்கீல்களுக்கும் நன்றி என்று உத்தரவிட்டனர்.

Related Stories: