தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு 16 ஆயிரம் கோடி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குகு (டான்ஜெட்கோ) மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய 16 ஆயிரம் கோடி, கடந்த அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்படாத நிபந்தனைகளால் இதுவரை மத்திய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நிலையை சமாளிக்க மின் பகிர்மான நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவியை கடந்த ஆண்டு அறிவித்தது. அதன் அடிப்படையில் டான்ஜெட்கோவிற்கு மத்திய அரசு நீண்டநாள் கடன் அடிப்படையில் 30,230 கோடியை கடந்த ஆண்டு ஒதுக்கியது. இதில் முதல் தவணையாக 14 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக டான்ஜெட்கோவிற்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையான சுமார் 16 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிதியை பெறுவதற்கு மத்திய அரசு உதய் (உஜ்வால் உறுதி யோஜனா திட்டம்) திட்டத்தின்கீழ் சில நிபந்தனைகளை விதித்திருந்தது.

அதில், மின் பகிர்மான நிறுவனங்கள் மின் கட்டணத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். இது குறித்து டான்ஜெட்கோ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மின் கட்டணத்தில் மாற்றம் செய்துவிட்டால் தேர்தலில் அது பிரதிபலித்துவிடும் என்பதற்காக கடந்த அதிமுக அரசு அதை செய்யவில்லை. இதனால், கடந்த நிதியாண்டில் (2020-2021) மட்டும் டான்ஜெட்கோவுக்கு 18 ஆயிரம் கோடி பண இழப்பு ஏற்பட்டுள்ளது  என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த நிலை 2021-2022 நிதியாண்டுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்தான் தமிழ்நாட்டுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் பைனான்ஸ் கார்பரேஷன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நிதி நிலை மற்றும் நிதி பற்றாக்குறை கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் நிதி நிலையை சீராக்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 17ம் தேதி புதுடெல்லியில் பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினார். அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2ம் தவணை நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையும் அடங்கும். இந்த நிலையில், டான்ஜெட்கோ மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் (டிஎன்டிசி) ஆகியவற்றின் நிதி நிலை, அவற்றின் மேலாண்மை ஆகியவை குறித்து விலாவாரியாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டான்ஜெட்கோவிற்கு மத்திய அரசு நீண்டநாள் கடன் அடிப்படையில் 30,230 கோடியை கடந்த ஆண்டு ஒதுக்கியது. இதில் முதல்  தவணையாக 14 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக டான்ஜெட்கோவிற்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையான சுமார் 16 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்படவில்லை.

உஜ்வால் திட்டத்தால் 50% கடும் இழப்பு

மத்திய அரசின் உஜ்வால் உறுதி யோஜனா திட்டத்தில் தமிழக அரசு கடந்த 2017ல் இணைந்ததன் அடிப்படையில் 50 சதவீத இழப்பை மாநில அரசு சந்தித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பை சமாளிக்கவில்லை என்றால் 4வது நிதி ஆண்டிலும் 50 சதவீத பண இழப்பை டான்ஜெட்கோ எதிர்கொள்ள நேரிடும்.

ஒரு யூனிட்டுக்கு 2.2 இழப்பு

தமிழக மின்வாரியத்துக்கு ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திலும் 2.2  இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை கொரோனா 2வது அலை தாக்கத்தால் இந்த ஆண்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இழப்பு அதிகமாகவும் வாய்ப்புள்ளது.

Related Stories: