தமிழக அரசின் பொருளாதாரத்தை வளர்த்து திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் 5 ஆண்டில் நிறைவேறும்: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சென்னை: தமிழக அரசின் பொருளாதாரத்தை வளர்த்து, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் வரும் 5 ஆண்டுகளில் படிப்படியாக கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) பேசியதாவது: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல சாதனைகளை செய்துள்ளோம். கவர்னர் உரையில் பல கோரிக்கைகளை எதிர்பார்த்தோம். தேர்தலின்போது 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தீர்கள்.

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும், குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் 1000 உரிமைத்தொகை, சுயஉதவி குழுக்களுக்கு கடன் ரத்து, பெட்ரோல் 5, டீசலுக்கு 4 குறைக்கப்படும் என்று சொன்னீர்கள். ஏன் இது ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை?  

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: தேர்தல் நேரத்தில் சொன்னது கவர்னர் உரையில் அறிவிக்கப்படவில்லையே என்று ஒரு பட்டியலை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.  இதே கவர்னர் உரையில் சொல்லப்பட்டிருக்கிறது, ஜூலை மாதம் அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று. நீங்கள் விட்டு விட்டு போகும்போது எவ்வளவு கடனை இந்த அரசின் மீது சுமத்திவிட்டு போயிருக்கிறீர்கள் என்பது பற்றிதான் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது.  நீங்கள் போகும்போது கடனை வைத்துவிட்டு போனதால், இந்த அரசை எப்படி நடத்துவது? ஏற்கனவே நீங்கள் அறிவித்த திட்டங்கள், கலைஞர் அறிவித்த திட்டங்களெல்லாம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்கும் பணம் கொடுக்க வேண்டும்.

புதிதாக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத திட்டம், அதாவது அறிவித்தது குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் கொடுப்போம் என்றது. அறிவிக்காத திட்டம் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு 14 வகையான மளிகை பொருட்களை கொடுக்கிறோம் என்பது அறிவிக்காத திட்டம். அதே நேரத்தில், ஒரு ஆட்சி என்பது 5 ஆண்டு காலத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுதான் இந்த ஆட்சியை மக்கள் இங்கு அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் 5 நிதிநிலை அறிக்கை இருக்கிறது, இன்னும் 5 கவர்னர் உரை இருக்கிறது. ஆக படிப்படியாக இந்த அரசின் பொருளாதாரத்தையும் வளர்த்து, சொல்லப்பட்டதெல்லாம் கட்டாயம் இந்த 5 ஆண்டு காலத்தில் வரும். 

Related Stories: