நடிகையை ஏமாற்றியதாக பாலியல் வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு: போலீஸ் தரப்பு பதில் தர செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  நாடோடிகள் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. மலேசிய தூதரகத்தில் பணியாற்றி வருபவர். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே 28ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் 16ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில்  தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை 24ம் தேதி (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: