கொரோனா தினசரி தொற்று பாதிப்பு: 91 நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்கு கீழ் சரிவு: 4 மாநிலங்களில் பரவியது டெல்டா பிளஸ்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 91 நாட்களுக்கு பின் 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைத்துள்ளது. புதிய வகை கொரோனா வைரசான டெல்டா பிளஸ் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பரவியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய் தொற்று தினசரி பாதிப்பு குறித்த விவரங்களை  மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 91 நாட்களில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 50ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தொற்று பாதித்த 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 68 நாட்களில் மிக குறைவாகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3,39,302 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,62,521ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில் 96.49 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளான நேற்று (நேற்று முன்தினம்) 86.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது உலகிலேயே அதிகபட்ச ஒருநாள் தடுப்பூசி எண்ணிக்கையாகும். மொத்தம் 28.87 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில் பிற்பகல் வரை நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையே 2வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த டெல்டா பிளஸ் வைரசினால் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவில் டெல்டா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரசால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வகை வைரஸ் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, ரஷ்யா, சீனா ஆகிய 8 நாடுகளில் பரவியிருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

தற்போதைக்கு இந்த வகை வைரஸ் ஆபத்தானது என நிரூபணமாகவில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.  

கோவாக்சின் 77.8% செயல்திறன் கொண்டது

நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக முதன்முதலில்  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு கட்ட பரிசோதனைகள் மட்டுமே முடிந்த நிலையில் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது  சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஜூலையில் 3வது கட்ட பரிசோதனை முடிக்கப்பட்டு முழு உரிமம் பெற விண்ணப்பிக்கப்படும் என பாரத் பயோடெக் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை அறிக்கையை பாரத் பயோடெக் நிறுவனம் தேசிய மருந்து கட்டுப்பாடு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. இதில், கோவாக்சின் 77.8 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>