மேகதாது அணை குறித்து விவாதிக்க இருந்த நிலையில் காவிரி ஆணைய கூட்டம் நாளை மறுதினம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மேகதாது அணை குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்தின் கூட்டம் திடீரென நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மத்திய ஜல்சக்திதுறை தரப்பில் கடந்த 15ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது இடைக்கால தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வரும் 22ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இதில் மத்திய ஜல்சக்திதுறை செயலாளர், தமிழகம் உட்பட நான்கு மாநில உறுப்பினர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த கூட்டத்தின் போது இதுவரை காவிரி ஒழுங்காற்று குழுவில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட நீர் புள்ளி விவரங்கள்,

அணை பாதுகாப்பு, காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கர்நாடகா திறந்துவிட்ட நீரின் அளவு, ஆணையத்திற்கு என நிரந்தர தலைவர் ஆகியவை குறித்தும், முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது குறித்தும் கண்டிப்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில் திடீரென வரும் 25ம் தேதி அதாவது வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆணைய வட்டாரங்கள் தரப்பில் கிடைத்த தகவலில், ‘தமிழகம் மற்றும் புதுவையில் புதியதாக ஆட்சி பொறுப்பில் அமைந்துள்ள அரசுகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் நிபுணர்கள், புதிய உறுப்பினர்கள் சிலரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதால் தான், தற்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: