பிரதமர் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் குப்கர் கூட்டணி, காங்கிரஸ் பங்கேற்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் குப்கர் கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காஷ்மீரில் சட்டப்பேரவை நடத்துவது, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. இதற்காக, காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து  தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என 6 பிரதான கட்சிகள் இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்ரீநகரில்  நேற்று ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டணி தலைவர் பரூக் அப்துல்லா, ‘‘நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம். எங்களது நிலைப்பாட்டை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் எடுத்துக்கூறுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.  இதே போல காங்கிரஸ் கட்சியும் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. கட்சி தலைவர்சோனியா தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: