×

ARTICLE 15

நன்றி குங்குமம் தோழி

அனுபவ்சிங் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ‘ARTICLE 15’. சாதியப் பாகுபாடுகளையும், அதன் மூலம் நிகழும் அக்கிரமங்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கும் படம்.இதில் உத்தரப்பிரதேச மாநிலம் பதூன் கிராமத்தில் நிகழ்ந்த இரண்டு சிறுமிகளின் இறப்புச் சம்பவம் மற்றும் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட சிறுமி ஒருவர், அதில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பிரச்சனைகள் என எல்லாவற்றையும் அப்பட்டமாய் அழுத்தமாய் பதிவு செய்துள்ள படம்.  

கூடவே, வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீடு, தீண்டாமை, சாதிய அடக்கு முறைகள், சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலை, பாலியல் வன்புணர்வு என சமுதாயத்தில் நடக்கும் அத்தனை அவலங் களையும் பேசிச் செல்கிறது படம். நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தவற்றை தைரியமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட ஆர்டிக்கிள்-15 சட்டவரையறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனத்தால், மதத்தால், சாதியால், பாலினத்தால், பிறப்பிடங்களை வைத்து யாரும் எவரையும் தாழ்த்தக்கூடாது என்பதே. படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா பார்வையில். சாதிய கொடுமைகளும் அதன் வக்கிரங்களும் காட்சிகளாக விரிகின்றன. வசனங்கள் ஒவ்வொன்றும் பளீர் ரகம்.

ஒரு இடத்தில்  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் குறித்து, அங்கிருக்கும் பெண் மருத்துவரிடம் கேள்வி கேட்க, அவர், “கேங்க் ரேப் சார்... கொடூரமான முறையில் மூன்று பேர் தொடர்ந்து வன்புணர்வு செய்திருக்காங்க!! ’’- என்கிறார். அப்ப பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அதைத்தான் எழுதுவியா?! என கேள்வி கேட்கிறார் காவலர். “ஆமா சார், அதுதானே உண்மை... அறிக்கையில் அதைத்தான் எழுதுவேன்” என் கடமை யைத்தானே செய்கிறேன்” என்கிறார் மருத்துவர் தீர்மானமாக.

“நீ ஒன்னும் இங்கு தலைமை மருத்துவர் இல்லை” நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்’’ என சொல்லி.. அந்தப் பெண் மருத்துவருக்கு முன்பே, தலைமை மருத்துவருக்கு போன் செய்து, “என்னடா, இப்போவெல்லாம் வேலை செய்யுமிடத்தில் பெண்களோட நடமாட்டம் அதிகமாக இருக்கு’’ என தொலைபேசியில் மருத்துவரைப் பார்த்துக்கொண்டே மிரட்டுகிறார்.

மேலும்,  அவங்கள்லாம் யாருடா?! யாரு?! என்ன சாதி?
நாம கட்டுற வரிப் பணத்தில், இடஒதுக்கீடுல படிச்சுட்டு கோட்டாவுல வேலை வாங்கிட்டு வந்து இங்க நாம சொல்றதை கேக்காமல் நமக்கு எதிராவே பேசுறது, நடந்துக்குறது!! - என பேசிக்கொண்டே செல்கிறார். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்குள் பொருந்திப் போகிற ஒரு தைரியமான படம். குறிப்பாக வசனங்களின் அழுத்தமும், பின்னணி இசையும் பிரமாதம். எதார்த்தமாக படம் நகரும் படத்தில், காணாமல் போன சிறுமியை தேடும் இடங்கள் எதிர்பார்ப்பையும் திகிலையும் பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன.

காவல் நிலைய வளாகத்தில் நாயகன் சக காவல்துறை அதிகாரிகளிடம் அவரவர் சாதியை கேட்கும் காட்சி படு அசத்தல்..! காவல் நிலைய வாசலில் இருக்கும் அடைப்பை எடுக்கும் காட்சி நம்மை அப்படியே அடித்துப்போடுகிறது. “நானும் இவரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். அங்க எங்கப்பா டீச்சரா இருந்தார். இவரோட அம்மா கூட்டி, கழுவி வேலைப்பார்த்தாங்க.. இதோ, இப்போ ஒரே ஸ்டேஷன்ல நாங்க ஒன்னா வேலை பார்க்கிறோம். பிரிவினை, பாகுபாடு எதுவும் இல்லையே?!! அதை நாங்க கடந்து வந்துட்டோமே!!’’

எனச் சொல்ல, இவரை என்னைக்காவது கூட கூட்டிட்டு போயி சாமி கும்பிட்டிருக்கியா? இல்லதானே.. அது இன்னும் முடியாதுதானே.. சும்மா உருட்டாத.. இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு...” போன்ற வசனங்கள் நம்மை உலுக்கிப் போடுகிறது.இயல்பாய் ஆரம்பித்து நகரும் படத்தில் பல திருப்பங்களும், நாம் வாழும் சமூகத்தின் கோர முகமும் நமக்கு கோடிட்டுக் காட்டப்படுகிறது உறுத்தல்களுடன் படம் பார்ப்பது நிச்சயம்.

இந்த சம்பவம் நிகழ்ந்தது 2014ம் ஆண்டு. உத்தரப்பிரதேச  மாநிலம், பதூன் மாவட்டம், உஷைத் பகுதியில் அமைந்துள்ள கத்ரா கிராமத்தில் வசித்து
வந்தனர்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள். ஒருவரின் வயது 14. மற்றொருவரின் வயது 15. இரவு, தங்கள் வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள மறைவான பகுதிக்குச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில் பதறிப்போன பெற்றோர்கள், உஷைத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றுள்ளனர். போலீஸ்காரர் கள் புகாரை வாங்க மறுக்க, அழுதபடியே இரவைக் கழித்துள்ளனர். மறுநாள் காலை. அவர்கள் வீட்டில் இருந்து சரியாக 250 மீட்டர் தொலைவில் இருக்கும் மாமரத்தில் இரண்டு பெண்கள் துப்பட்டாவால் கழுத்தைக் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்தது போய் பார்த்தபோது, தூக்கில் தொங்கிய இருவரும் இவர்களின் மகள்கள்.

காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும்,  சம்பவ இடத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்கள் யாரும் வரவே இல்லை. பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெண்களின் உடலை போலீஸ்காரர்கள் கைப்பற்ற மக்கள் அனுமதிக்கவில்லை. 12 மணி நேரமாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளின் பிணங்களை சுற்றிலும் போராடிக்கொண்டு இருந்தவர்களுக்கு இடையே, ‘எங்கள் பிள்ளைகளின் உடல்களை இறக்குங்கள்’ என்று அந்தப் பெற்றோர் கதறியது உச்சக்கட்டக் கொடுமை.

பிரேதப் பரிசோதனையில் இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டு,  உயிருடன் தூக்கில் ஏற்றப்பட்ட கொடூரம் தெரியவந்தது. விவகாரம் ஊடகங்களில் வெளியாகி விஸ்வரூபம் எடுத்தது. விசாரணையில், இரண்டு பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்தது உஷைத் காவல் நிலைய காவலர் சர்வேஷ் யாதவ், பப்பு யாதவ், பிரிஜேஷ் யாதவ் உள்ளிட்ட ஏழு பேர் என்பது தெரியவந்துள்ளது.  குற்றவாளிகள் மீது சதித் திட்டம் தீட்டியது, கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தோழி டீம்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!