கொரோனா பரவலால் நாடு திரும்ப முடியவில்ைல நிச்சயித்த தேதியில் அமெரிக்காவில் திருமணம் செய்த காதல் ஜோடி: ஆன்லைன் வீடியோவில் பார்த்து பெற்றோர் ஆசீர்வாதம்

திருமலை: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், கோட்டகிரியை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் என்பவரது மகள் தனுஜா. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் கிருஷ்ணதேஜா. இருவரும் அமெரிக்காவில் எம்எஸ் படித்தனர். தொடர்ந்து, அங்குள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, இருவரும் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். எம்எஸ் படித்தபோது தனுஜாவுக்கும், கிருஷ்ணதேஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.  இந்நிலையில் தங்கள் காதல் விவகாரத்தை இருவரும் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, இருவீட்டாரின் பெற்றோரும் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.

இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து நிச்சயித்தனர். திருமணத்தை இரு குடும்பத்தினரும் மிக பிரமாண்டமாக உற்றார், உறவினர்கள்  புடைசூழ்ந்து ஆசீர்வாதம் செய்து மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு மத்தியில்   நடத்த வேண்டும் என்று விரும்பினர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, அமெரிக்காவில் உள்ள தனுஜா, கிருஷ்ணதேஜா இருவரும் இந்தியாவுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவீட்டாரின் பெற்றோர் நிச்சயித்த தேதியில் அமெரிக்காவில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். தொடர்ந்து, அமெரிக்காவில் திருமணம் நடந்தது. இதில், தனுஜா, கிருஷ்ணதேஜா இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் இரு குடும்பத்தை சேர்ந்த பெரியவர்களும் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், திருமணத்தை இருவீட்டாரின் பெற்றோர், உறவினர்கள் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே பார்த்து ஆசீர்வதித்தனர்.

Related Stories: