நிதி சுமையில் சிக்கிய ஜெட் ஏர்வேசை மீட்க கடன் தீர்வு திட்டத்திற்கு சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் தீர்வு திட்டத்தை செயல்படுத்த ஜலான் கல்ராக் கூட்டமைப்பிற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 2008ம் ஆண்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பல வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று செயல்பட்டு வந்தது. கடனை திரும்ப செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட ஜெட் ஏர்வேஸ் 2019 ஏப்ரல் முதல் விமான சேவையை நிறுத்தியது. இதையடுத்து, எஸ்பிஐ தலைமையில் கடன் கொடுத்த வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள் அமர்வு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தவும், 90 நாட்களில் திவால் நடவடிக்கைகளை முடிக்கவும் உத்தரவிட்டது.  

அப்போது, இரண்டு ஏலதாரர்களான ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த முதலீட்டாளர் முராரி லால் ஜலான், இங்கிலாந்தில் செயல்படும் கல்ராக் கேபிட்டல் நிறுவனங்களின் கூட்டமைப்பு இணைந்து 2020 அக்டோபரில் சமர்ப்பித்த கடன் தீர்வு திட்டத்துக்கு கடன் வழங்கிய வங்கிகளின் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், கடன் வழங்கிய வங்கிகளுக்கும் ஏலதாரர்களுக்கும் இடையிலான பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் சமர்பிக்கப்பட்டன.  இதனை விசாரித்த மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய நீதிபதிகள் முகமது அஜ்மல், நல்லசேனாபதி கொண்ட அமர்வு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் தீர்வு திட்டத்தை செயல்படுத்த ஜலான் கல்ராக் கூட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது. மேலும், `இந்த கடன் தீர்வு திட்டம் நேற்று முதல், 90 நாட்களுக்குள் அமல்படுத்தப்பட வேண்டும்,’ என்றும் அமர்வு உத்தரவிட்டது.

Related Stories: