பிளஸ் 2 தேர்வு நடத்துவதில் பிடிவாதம் ‘இறப்பு ஏற்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு’: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: பிளஸ் 2 தேர்வு நடத்துவதில் ஆந்திர மாநில அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், ‘தேர்வு நடத்தி இறப்பு ஏற்பட்டால், நீங்கள் தான் பொறுப்பு’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள 18 மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 மாநிலங்களில் ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம், பஞ்சாப், திரிபூரா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்துவது குறித்து தங்களது முடிவுகளை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘கேரள மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மட்டும்தான் இன்னும் பிளஸ் 2 தேர்வை நடத்த நிறுத்தி வைத்துள்ளீர்கள். இதற்கு சிறப்பான காரணங்களை சொல்லுங்கள். இந்த விவகாரத்தில் இறப்புகள் ஏதேனும் நிகழ்ந்தால், மாநில அரசு பொறுப்பு என்று நாங்கள் எடுத்து கொள்வோம்’’ என்றனர்.

இதற்கு பதிலளித்த ஆந்திர மாநிலம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாபூஸ் நாஸ்கி, ‘‘மாநில பாடபிரிவில் 10ம் வகுப்பில் கிரேஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் இன்டர்நெல் தேர்வு மதிப்பெண் முறையும் அவ்வளவு வலுவாக இல்லை என்பதால் பிரச்சனை உள்ளது. தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவு ஜூலை முதல் வாரத்தில் எடுக்கப்படும்’’ என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், தேர்வு நடத்துவதற்கான காரணங்களை இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: