தமிழக எல்லையில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும்: கேரள முதல்வர் தகவல்

திருவனந்தபுரம்:  தமிழக எல்லையில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், சிலர் கேரள எல்லையில் உள்ள பகுதிகளுக்கு மது வாங்க படையெடுக்கின்றனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கு நிபந்தனைகளில் தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   நோய் பரவல் குறைவாக உள்ள இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறப்பது குறித்தும் அனைத்து கல்லூரிகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கடந்த 17ம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழக எல்லையிலுள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படும். மேலும் தமிழக எல்லையில் உள்ள இடுக்கிக்கு தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஏராளமானோர் பணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தினமும் பணிக்கு வருபவர்களுக்கு கொரோனா ஆன்டிஜன் பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தினமும் தமிழ்நாடு சென்று வர அனுமதிக்க முடியாது’’ என்றார்.

Related Stories: