ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து சரியே: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை சிபிஎஸ்இ நிர்வாகம் ரத்து செய்தது சரியானதே என உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ‘பத்தாம் வகுப்பு. பதினொன்றாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில், அதாவது வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண்களாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த மதிப்பெண் கணக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில்,‘‘மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெயிட்டேஜ் முறையை கைவிட்டு, தேர்வுகளை நடத்த முன்வர வேண்டும்’’ என கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘நீங்கள் தேர்வை நடத்த வேண்டும் என சொல்கிறீர்கள், ஆனால் மாணவர்கள் அச்சம் அடைகின்றனர். கொரோனா போன்ற ஆபத்தான காலத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் வேண்டும் என்றால் மாணவர்கள் விருப்பத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதில் மனுதாரர்களுக்கு என்ன பிரச்னை என்பது புரியவில்லை’’ என கேள்வியெழுப்பினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘மாணவர்களின் உயிர் என்பது விலை மதிப்பற்றது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களை கட்டாயம் தேர்வு எழுதச் சொல்லி நிர்பந்திக்க முடியாது. தேர்வு எழுத வரும் ஒரு மாணவருக்கு ஏதாவது ஆனாலும் கூட அந்த மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு நடத்தும் அமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி விடுவார்கள். அது இதைவிட பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்’’ என தெரிவித்தார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,” இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் பல்வேறு கல்வி நிபுணர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு தான் 12ம் வகுப்பு தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இது மாணவர்களின் பொதுநலனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் முன்னதாக மாணவர்களுக்கான மதிப்பெண்களை வழங்கும் மதிப்பீட்டு முறை குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. அதனால் 10,11,12ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் மதிப்பெண்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தேர்வு முடிவுகளை ஜூலை 21ல் அறிவிக்கலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் இம்ப்ரூவ்ெமண்ட் தேர்வை எழுதலாம்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: