தமிழகத்தில் முதன்முறையாக அதிநவீன முறையில் எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் 48 லட்சம் கொள்ளை; வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை : பணத்தை மீட்க தனிப்படை அரியானா விரைவு

சென்னை: சென்னையில் ராமாபுரம், விரும்கம்பாக்கம் வள்ளுவர் சாலை, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் வங்கிக்கு சொந்தமான பணத்தை 2 வடமாநில நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராமாபுரம் எஸ்பிஐ வங்கியின் மேலாளர் ராயலா நகர் காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகார் ஒன்று அளித்தார்.  இது குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் வடமாநில கொள்ளையர்களின் நூதன மோசடி குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில்  சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கு பிறகு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை முழுவதும் கடந்த 3 நாட்களாக எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன திருட்டு நடந்தது தொடர்பாக இதுவரை 7 புகார்கள் வந்துள்ளன. இது எப்படி சாத்தியம் என்று விளக்கும்படி வங்கி நிர்வாகத்தை அழைத்து இருந்தோம். ‘அதன்படி, எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல தலைமை மேலாளர் ராதாகிருஷ்ணன் என்னை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியபடி, எஸ்பிஐ  டெபாசிட் இயந்திரத்தில் இருந்து மட்டும் பணம் எடுக்கப்பட்டதாக 19 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார் வந்த உடன், எஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் வசதியை  தற்காலிகமாக நிறுத்திவிட்டனர். இயந்திரத்தில் உள்ள சிறிய தொழில் நுட்ப தவறை தெரிந்து கொண்டு, வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த வகை நூதன திருட்டு தமிழகத்தில் இதுதான் முதல் முறை. இதுவரை 7 புகார்கள் வந்துள்ளன. எனினும் தமிழகம் முழுவதும் வந்துள்ள 19 புகார்களை எடுத்து பார்த்தால் ₹48 லட்சம் வரை எஸ்பிஐ வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 4 வடமாநிலத்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்து.இவர்களைகளை பிடிக்க தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் தடைப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிக்க அரியானா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர் என்றார்.

ஜப்பான் நிறுவனம் தயாரித்த இயந்திரத்தில் குளறுபடி

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் களில் கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் இருக்கும் இடங்களில் மட்டும் கொள்ளை  நிகழ்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஓகேஜ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்து ஏடிஎம்களில் வைக்கப்பட்டிருக்கும் கேஷ் டெபாசிட் மெஷின்களில் மட்டும் இந்த கொள்ளையை, கொள்ளை கும்பல் அரங்கேற்றுகிறது. பொதுவாக கேஷ் டெபாசிட் மிசின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்தினால், பணமானது வெளியே வரும். அவ்வாறு ஏடிஎம் மிஷினில் இருந்து வெளிவந்த பணத்தை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் மெஷினுக்கு உள்ளேயே திரும்பிவிடும். இந்த தொழில்நுட்பத்தை அறிந்த கொள்ளையர்கள் பணம் மெஷினில் இருந்து வெளிவந்தவுடன், 20 நொடிகளுக்கு பணத்தை எடுக்காமல் இருந்துள்ளனர்.

அதன்பின் பணம் மீண்டும் மெஷினுக்குள் செல்வதற்குள்ளாக, பணம் வெளியே வரும் அந்த வாயில் பகுதியில் ஷட்டரையும், சென்சாரையும், விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு தடுத்து நிறுத்தப்படுவதால் பணம் உள்ளே செல்ல முடியாமல் நிற்கும். அப்போது அந்தப் பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மீண்டும் கையை எடுத்தவுடன் பணம் உள்ளே வந்துவிட்டதாக மிஷின் சென்சார் நினைத்துக் கொண்டு, பணம் எடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மீண்டும் பணம் தானாகவே சென்றுவிடும்.

Related Stories: