கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார அளவில் கட்டளை மையம் அமைக்க திட்டம்

திருச்சி: கொரோனா தொற்றின் 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார அளவில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (வார் ரூம் ) அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றின் 3வது அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தற்போது உள்ள மருத்துவ கட்டமைப்புகளை அப்படியே தொடர முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2வது அலையில் பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் (வார்ரூம்) திட்டத்தை வட்டார அளவில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலையில் ெபாதுமக்களுக்கு உடனடியாக படுக்கை மற்றும்  ஆக்சிஜன் வசதிகளை கொண்டு சேர்ப்பதில் கட்டளை மையம் (வார்ரூம்) முக்கிய  பங்கு வகித்தது. இந்த மையத்தின் மூலம் உடனடியாக பொதுமக்களுக்கு உதவி  கிடைத்தது. இந்நிலையில், கொரோனா தொற்றின் 3வது அலை முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக வட்டார அளவில் வார் ரூம் அமைக்க தமிழக அரசு முடிவு  செய்துள்ளது. கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை கொண்டு சேர்க்க இந்த வார் ரூம் உதவியாக  இருக்க கூடும்.  இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றில் 2வது அலை குறைந்து கொண்டே வரும் நிலையில் 3வது அலை வரலாம் என்றும், குறிப்பாக இந்த 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 3வது அலையை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக வட்டார அளவில் வார் ரூம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதை வட்டார அளவில் கொண்டு செல்வதன் மூலம் உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும். மேலும் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவை அமைக்கவும், அதில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கான மருந்துகளை தேவையான அளவு கையிருப்பு வைக்கவும், அனைத்து மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்களை கண்டறிந்து பட்டியலை தயாராக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி சோதனை நடத்துவது, உருமாறும் கொரோனா தொற்று வகைகளை விரைவில் கண்டறிவது, அடுத்த சில வாரங்களில் தீவிரமாக தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளையும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: