திருமங்கலம் அருகே அகலம் குறைத்து அமைக்கப்படும் தார்ச்சாலை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, சாலையின் அகலத்தை குறைத்து புதிதாக தார்ச்சாலை அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது விடத்தகுளம் கிராமம். இந்த கிராமத்திலிருந்து எட்டுநாழி, எட்டுநாழிபுதூர் வழியாக உலகாணிக்கு தார் சாலை செல்கிறது. திருமங்கலம் நகருடன், மதுரை விமானநிலைய சாலை மற்றும் காரியாபட்டி 4 வழிச்சாலையை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை வழியாக டவுன் பஸ்கள், லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் டூவிலர்கள் அதிகளவில் சென்று வருகின்றன. உரிய பராமரிப்பில்லாததால் இந்த சாலை குண்டும், குழியமாக மாறியது.

இப்பகுதிமக்களின் கோரிக்கைக்கு பின்னர் தற்போது இந்த சாலையை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே இருந்த அகலத்தை விட, தற்போது குறுகலாக சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இது குறித்து எட்டுநாழி, புதூர் மற்றும் விடத்தகுளம் கிராம மக்கள் கூறுகையில், ‘‘போக்குவரத்து மிகுந்த இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது. தற்போது இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் அகலம் குறைந்து அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>