சேலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழி?.. ரவுடி கொலை வழக்கில் 10 பேரிடம் விசாரணை: பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் ேகாயில் தெருவை சேர்ந்தவர் பாஷா (எ) பாதுஷா மொய்தீன் (35). இவரது நண்பர் சன்னியாசிகுண்டை சேர்ந்த தீலிப் (34). இவர்கள் இருவரும் நேற்று தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் டாஸ்மாக் சரக்கு வாங்குவதற் காக டூவீலரில்  சென்றனர். இவர்கள் சென்ற டூவீலர் தீவட்டிப்பட்டி- மொம்மிடி சாலையில் லோக்கூர் வனப்பகுதியில் சென்றபோது பழுதாகி விட்டது. இதனால் பாஷாவை அங்கேயே நிறுத்திவிட்டு, வண்டிக்கு ஆயிலும், மதுவையும் வாங்கி வருவதாக கூறிய தீலிப், வேறொரு வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று விட்டார். அவர் திரும்பி வந்தபோது, அங்கு பாஷா இல்லை. சற்று தூரத்தில் வெட்டுக்காயங்களுடன் பாஷா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றிகொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். ஆனால் வழியிலேயே பாஷா உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பர் தீலிப்பை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எப்படி வண்டி நிற்கும்? கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக அம்மாப்பேட்டை, வீராணம் பகுதியை சேர்ந்த 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நேற்று கொலை செய்யப்பட்ட பாஷா (எ) பாதுஷா மொய்தீன் மீது கொலை, வழிப்பறி உள்பட 10 வழக்குகள் உள்ளது. கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் ரவுடி பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு வீராணத்தை சேர்ந்த கூழ்ரங்கநாதனை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் காணவில்லை என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில் கிச்சிப்பாளையத்தில் கூழ்ரங்கநாதன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலையில் நேற்று கொல்லப்பட்ட பாஷா முக்கிய குற்றவாளியாவார். இவருடன் சேர்த்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பாஷாவின் தாய்க்கு கூழ்ரங்கநாதன் பாலியல் தொந்தரவு செய்ததால் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இதற்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் அதே ஆண்டில் பாஷாவின் உறவினர் ஜாகீர்உசேன் கொலை செய்யப்பட்டார். டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஜாகீர்உசேன் கீழே விழுந்தார். எதிரே டூவீலரில் வந்த ஆசாமிகள், கத்தியை அவரது கழுத்தில் இழுத்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கூழ்ரங்கநாதனின் மகன் உள்பட அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கூழ்ரங்கநாதன் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த கொலையில் ஜாகீர்உசேன் முக்கிய குற்றவாளியாவார்.

இந்த நிலையில் தான் கூழ்ரங்காநாதன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாஷா(எ) பாதுஷா மொய்தீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து கூழ்ரங்கநாதன் மகன் கண்ணதாசன் உள்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>