மறக்கடிக்கப்படும் இணைப்பு ரயில்கள்: தூத்துக்குடியை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே

நெல்லை: தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் இணைப்பு ரயில்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாததால் அம்மாவட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை தெற்கு ரயில்வே புறக்கணித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரை கோட்ட வழித்தடங்களில் ராமேஸ்வரம் போன்று தூத்துக்குடி நகரம் தனித்து நிற்கிறது. கன்னியாகுமரி - சென்னை வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில்களை தனித்து இயக்க வேண்டியதுள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்நகருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இணைப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

குறிப்பாக கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரசிற்கும், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரசிற்கும் இணைப்பு ரயில்கள், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து 7 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில், இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரசில் வாஞ்சி மணியாச்சியில் இணைக்கப்படும். தினமும் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் 6 பெட்டிகளோடு புறப்படும் மற்றொரு ரயில் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரசோடு இணைக்கப்படும்.

கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் ரயில்கள் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டபோது, தெற்கு ரயில்வே இணைப்பு ரயில்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இவ்வாண்டும் கொரோனா பாதிப்பு குறைந்து கோவை, குருவாயூர் எக்ஸ்பிரஸ்கள் இயக்கப்படும் சூழலில், தூத்துக்குடிக்கான இணைப்பு ரயில்கள் குறித்து பேச்சே இல்லை. தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. வாரம் ஒருமுறை ஓகா எக்ஸ்பிரஸ் செல்கிறது. இந்நிலையில் இணைப்பு ரயில்கள் ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாததால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் சென்னை, கோவை செல்ல ேபாதிய ரயில்கள் இன்றி தவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு பேசியும் பதில் இல்லை. கொரோனா இரண்டாம் கட்ட அலைக்கு பின்னர், கடந்த 15ம் தேதிக்கு பின்னர் முக்கிய ரயில்கள் அனைத்தும் இயங்கத் ெதாடங்கிவிட்டன.

ஆனால் தூத்துக்குடிக்கான இணைப்பு ரயில்களை மட்டும் தெற்கு ரயில்வே கண்டு கொள்ளவில்லை. தூத்துக்குடி நகரின் முக்கியத்துவம் கருதி, மீண்டும் இணைப்பு ரயில்களை விரைந்து இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். தூத்துக்குடியை தொடர்ந்து புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

>