நத்தம் அருகே பயங்கரம்; காதலி கண் முன்னே கல்லால் தாக்கி காதலன் கொலை: காதலி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

நத்தம்: நத்தம் அருகே காதலியின் கண் முன்னே கல்லால் தாக்கி காதலன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலியின் குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா (21). கேட்டரிங் முடித்துள்ளார். மூங்கில்பட்டி முல்லை நகரை சேர்ந்த ராசுவின் மகள் பரமேஸ்வரி (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பரமேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதை பரமேஸ்வரி, தனது காதலனிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டனர். மூங்கில்பட்டி முல்லை நகர் பகுதிக்கு நேற்றிரவு டூவீலரில் பாரதிராஜா வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்திற்கு காதலியை பாரதிராஜா வரவழைத்தார். பின் இருவரும் டூவீலரில் தப்பினர். சிறிது தூரம் சென்றதும் டூவீலர் பழுதாகி விட்டது. பழுதை பாரதிராஜா சரி செய்து கொண்டிருந்தார். அப்போது பரமேஸ்வரியை தேடி வந்த அவரது பெற்றோர், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த பரமேஸ்வரி, பாரதிராஜாவை மடக்கினர். அப்போது மலைச்சாமிக்கும், பாரதிராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த மலைச்சாமி அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து பாரதிராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த பாரதிராஜாவை,  அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மலைச்சாமி, அவரது பெற்றோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். காதலியின் கண் முன்பு காதலன் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>