வீட்டின் அருகே விளையாடிய 2 குழந்தைகள் திடீர் மாயம்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: கோட்டூர்புரம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 2 குழந்தைகளை, போலீசார் ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை,  கோட்டூர்புரம் அடையாறு ஆற்றின் அருகே 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வழக்கம் போல் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின்  அருகே 6 வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரியான 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து குழந்தைகளின் பெற்றோர் வெளியே வந்து பார்த்த போது 2 குழந்தைகளும்  திடீரென மாயமாகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நரிக்குறவர்கள் வீட்டின் அருகே உள்ள பகுதி மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரம் தேடிப்பார்த்தனர்.

ஆனால் 2 குழந்தைகளும் கிடைக்கவில்லை. இதனால் மர்ம நபர்கள் யாரேனும் தங்களது குழந்தைகளை கடத்தி இருக்க கூடும் என்று அச்சத்தில் நரிக்குறவர்கள் அனைவரும் நேற்று இரவு கோட்டூர்புரம் காவல்நிலையத்தை முற்றகையிட்டு சம்பவம் குறித்து முறையிட்டனர்.அப்போது பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் குழந்தைகளின் உறவினரான சாவித்திரி என்பவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் 2 குழந்தைகள் மாயமானதாக கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, குழந்தைகள் இருவரும் அடையாறு நோக்கி சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

உடனே சாலையில் பொருத்தப்பட்ட கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபடி சென்றனர். அப்போது அடையாறு சிக்னல் அருகே சாலையோரம் உள்ள நடைபாதையில் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே இரண்டு குழந்தைகளையும் போலீசார் மீட்டனர். மேலும், குழந்தைகளுக்கு போலீசார் சாக்லெட் வாங்கி கொடுத்து விசாரித்தனர். விசாரணையில் பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதால் நாங்கள் வீட்டை விட்டு வந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பெற்றோரை அழைத்து  சண்டை போடக்கூடாது என்று அறிவுரை வழங்கி 2 குழந்தைகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் 2 குழந்தைகளை மீட்ட போலீசாரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: