திமிங்கலம் உமிழும் ரூ2 கோடி மதிப்பிலான ‘அம்பர்கீரிஸ்’ கடத்தல்: 6 பேர் அதிரடி கைது

திருச்செந்தூர்: திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய ‘அம்பர்கீரிஸ்’ என்ற ரூ.2கோடி மதிப்பிலான மெழுகு பொருளை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்செந்தூர் பகுதியில் விலையுயர்ந்த பொருள் கடத்தி கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தாலுகா ஆபீஸ் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர்.

அதில் மெழுகு போன்ற பொருளை பையில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

மெழுகு போன்ற அந்தப் பொருள், திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கீரிஸ் என்பது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனேஷியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்புடையது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இளங்கோவன்(52), ராம்குமார்(27), முஹம்மது அஸ்லம்(33), ராஜா முஹம்மது(34), வெங்கடேஷ்(48), ஜான்பிரிட்டோ(48) என்பது தெரியவந்தது. தஞ்சை மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் அம்பர்கீரிஸ் என்ற விலையுயர்ந்த மெழுகு பொருளை இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேஷியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்ப இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும். பிடிப்பட்ட 6 பேர் மற்றும் 2 கிலோ எடையுள்ள அம்பர்கீரிஸ் மற்றும்  அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார், பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர், திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதுகுறித்து வனச்சரக அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘பிடிபட்டது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கீரிஸ் என்பது தெரியவந்தது. இது 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 2கீழ் வகைப்படுத்தப்பட்டது. இது தடை செய்யப்பட்ட பொருளாகும்.

இந்த அம்பர்கீரிஸ் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் ஒருவகையான பொருளாகும். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கீரிஸ் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அம்பர்கீரிசை ஐதராபாத்தில் உள்ள இன்ஸ்டியூட்டிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

Related Stories: