சசிகலாவை ‘பேய்’ என விமர்சனம்: அதிமுக மாஜி அமைச்சர் உருவப்பொம்மை எரிப்பு

நத்தம்: சசிகலாவை பேய் என விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவப்பொம்மையை எரித்து அமமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் நத்தம் தொகுதி எம்எல்ஏவுமான நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், ‘‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை. அவரை தொலைபேசியிலோ அல்லது வேறு விதத்திலோ தொடர்பு கொண்டால் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சசிகலா தாய் இல்லை. அவர் ஒரு பேய். அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ். லக்கேஜை சுமந்து செல்ல நாங்கள் ரெடியாக இல்லை’’ என்று காட்டமாக விமர்சித்தார். இதை கண்டித்து நத்தம் பேருந்து நிலையம் அருகே நேற்று அமமுகவினர் மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடத்தினர். அப்போது, நத்தம் விஸ்வநாதனின் உருவப்பொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>