இளம்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட அதிகாரி அதிரடி கைது: கேரளாவில் பயங்கரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன். அவரது மகள் விஸ்மயா (26). கொல்லத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அவருக்கும், சூரநாடு பகுதியை சேர்ந்த கிரண்குமாருக்கும் கடந்த ஆண்டு மே 31ம் தேதி திருமணம் நடந்தது. கிரண்குமார் மோட்டார் வாகன துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம், 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் மதிப்பு உள்ள கார் கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு முன்பு கிரண்குமார் பெண் பார்க்க வந்தபோது தனக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று கூறி இருந்தார். ஆனால் திருமணத்துக்கு பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கொடுமைப்படுத்தி வந்து உள்ளார். அதன்படி தனக்கு நல்ல கார் வாங்கி தரவில்லை என்று கூறி அடித்து சித்ரவதை செய்து வந்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விஸ்மயா தனது உடலில் ஏற்பட்ட காயங்களை போட்டோ எடுத்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இதேபோல் தனது கணவர் கொடுமைப்படுத்துவதையும் அவர் தெரிவித்து வந்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை விஸ்மயா வீட்டு குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் விசாரித்தனர். இந்நிலையில், தங்கள் மகள் தற்கொலை செய்யவில்ைல என்றும், கிரண்குமாரும் அவரது குடும்பத்தினரும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு உள்ளனர் என்றும் விஸ்மயாவின் பெற்றோர் போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார் கிரண்குமாரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். தொடர்ந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கிரண்குமாருக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: