அறையை மாற்றி அமர்ந்திருந்ததால் 30 நிமிட இடைவெளியில் ஒருவருக்கு 2 டோஸ் தடுப்பூசி: ஒடிசாவில் அலட்சியம்

மயூர்பஞ்ச்: ஒடிசாவில் 30 நிமிட இடைவெளியில் அறையை மாற்றி அமர்ந்திருந்த ஒருவருக்கு 2 தடுப்பூசி போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பீகாரில் மூதாட்டி ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2  டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது. தற்போது ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ரகுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார் சாஹு (51). கோவித் குண்டாபூரில் உள்ள சத்ய சாய் அரசுப் பள்ளியில் தடுப்பூசி போடச் சென்றார். முதலில் அவருக்கு ஒரு டோஸ் வழங்கப்பட்டது. அவர், கண்காணிப்பு அறையில் அமர்ந்திருக்காமல் மற்றொரு இடத்தில் அமர்ந்திருந்தார். சுமார் 30 நிமிடங்கள் கழித்து, ஒரு செவிலியர் வந்து அவருக்கு மற்றொரு தடுப்பூசி போட்டார். அதிர்ச்சியடைந்த சாஹூ, ‘நான் ஏற்கனவே தடுப்பூசி போட்டுவிட்டேன். மீண்டும் எதற்காக தடுப்பூசி போட்டீர்கள்?’ என்று கேட்டார். இதனால், தடுப்பூசி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தடுப்பூசி மையத்தின் மேற்பார்வையாளர் ராஜேந்திர பெஹெரா கூறுகையில், ‘முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு, சாஹு கண்காணிப்பு அறைக்குச் செல்லாமல், அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் அமர்ந்திருந்தார். அதையறியாமல் செவிலியர் அவருக்கு மற்றொரு தடுப்பூசி போட்டுள்ளார்’ என்றார். இதுகுறித்து டாக்டர் சிபுன் பாண்டே கூறுகையில், ‘ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டது குறித்து விசாரித்து வருகிறோம். சாஹூவை மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகிறோம். பணியில் அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: