×

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைந்து ரூ.435க்கு விற்பனை

சென்னை: தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.55 குறைந்துள்ளதால் கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ரூ.490க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையீட்டை அடுத்து ரூ.460ஆக குறைக்கப்பட்டது. கட்டுமான பொருட்கள் விலை மேலும் குறைக்கப்படும் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் உறுதி அளித்திருந்தனர். சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் அளித்திருந்த உறுதியை ஒட்டி சிமெண்ட் விலை மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். விலை குறைப்புக்கு பின் தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.435க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தனியார் சிமெண்ட் விலை கடந்த மார்ச் மாதம் முதல் படிப்படியாக உயர்ந்து ஜூன் மாதத்தில் ரூ.470 முதல் ரூ.490 வரை உயர்ந்தது. இந்த விலையேற்றம் இந்த பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை உருவாக்கியது. விலையை குறைக்க முதல்வர் அறிவுறுத்தியதின் பேரில் தொழில்துறை அலுவலர்கள், தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிமெண்ட் விலை ரூ.490லிருந்து ரூ.460 வரை குறைக்கப்பட்டது. இதன்பின்னர் முதல்வர் மீண்டும் விலையை குறைக்க அறிவுறுத்தினார். இதனால் இன்று தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.25 குறைந்துள்ளனர். இதனால் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.435க்கு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.



Tags : Tamil Nadu , cement
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...