காந்தி படத்துடன் மோடி படத்திற்கும் பூ மாலை போட்ட பாஜக நிர்வாகிகள்: ம.பி தடுப்பூசி முகாமில் பரபரப்பு

சத்னா: மத்திய பிரதேசத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் காந்தி படத்துடன் மோடியின் படத்திற்கும் பூ மாலையை பாஜக நிர்வாகிகள் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் 250 மையங்கள் மூலம் மெகா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், சட்னா அடுத்த குந்தி பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள் சிலர், மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன், பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கும் பூ மாலை அணிவித்திருந்தனர். மேலும், புகைப்படத்தின் முன்பாக மெழுகுவர்த்தியை ஏற்றியும், தூபக் குச்சிகளையும் ஏற்றி வைத்தனர். அப்போது, பாஜக நிர்வாகிகள் சிலர், புகைப்படத்தின் அருகே நின்று கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. வழக்கமாக மறைந்த தலைவர்களின் புகைப்படத்திற்குதான் பூ மாலை போட்டு மரியாதை செய்து கொண்டாடுவார்கள். அந்த வகையில் காந்தியின் படத்திற்கு பூ மாலை போட்ட நிலையில், அந்த புகைப்படத்தின் அருகே மோடியின் புகைப்படத்தையும் வைத்து, அதற்கும் பூ மாலையை போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புகைப்படம் வைரலானதையடுத்து, பலரும் உள்ளூர் பாஜக பொறுப்பானவர்களை கண்டித்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் நரேந்திர திரிபாதி கூறுகையில், ‘தடுப்பூசி முகாமில் கட்சியினர் நடந்து கொண்ட விஷயத்தை கண்டிக்கிறேன்.

நிகழ்ச்சியில் ​​பள்ளி தலைமையாசிரியர் முதல் பலரும் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் ஏதும் கண்டுகொள்ளவில்லை. யாருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவிக்க வேண்டும், யாருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவிக்க கூடாது என்பது கூட தெரியாமல் செயல்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: