×

யூரோ கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றில் டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா

ஆம்ஸ்டர்டாம்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. யூரோ கோப்பை கால்பந்து நடப்பு தொடரில் ஆம்ஸ்டர்டாம் நகரில் நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்து-வடக்கு மெசடோனியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. நேற்றைய போட்டியிலும் நெதர்லாந்து வீரர்கள் அபாரமாக ஆடி 3-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மெசடோனியா அணியை வீழ்த்தினர். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் மெம்பிஸ் டெபே ஒரு கோல் அடித்து, கணக்கை துவக்கி வைத்தார்.

2ம் பாதியில் நெதர்லாந்தின் கேப்டன் ஜார்ஜினியோ விஜ்னால்டம் 51 மற்றும் 58வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இறுதி வரை வடக்கு மெசடோனியா வீரர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. புகாரெஸ்ட் (ருமேனியா) நகரில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் கிறிஸ்டோப் பம்கார்ட்னர், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, அணிக்கான கோலை அடித்தார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு கோபன்ஹேகனில் நடந்த மற்றொரு போட்டியில் டென்மார்க்-ரஷ்யா மோதின.  

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் மிக்கெல் டாம்ஸ்கார்ட் ஒரு கோல் அடித்து கணக்கை துவக்கி வைத்தார். 2ம் பாதியில் யூசுப் பவுல்சன், ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் மற்றும் ஜோகிம் மேல் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் முன்கள வீரர், பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் டென்மார்க் வென்றது.  இந்த வெற்றியின் மூலம் டென்மார்க் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று அதிகாலை செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த போட்டியில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 2ம் பாதியில் பின்லாந்தின் கோல் கீப்பர் லூகாசின் சுய கோலால் பெல்ஜியம் அணிக்கு முன்னிலை கிடைத்தது. பின்னர் பெல்ஜியம் அணியின் முன்கள வீரர் லுகாகு, ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு (இன்று நள்ளிரவு) லண்டனில் நடைபெறும் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து-செக்.குடியரசு அணிகள் மோதுகின்றன. கிளாஸ்கோ நகரில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்த்து குரோஷியா மோதவுள்ளது.

Tags : Euro Cup ,Denmark ,Belgium ,Austria , Euro Cup football: Denmark, Belgium, Austria in the next round
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...