கல்லிலே கலை வண்ணம் கண்டாள்! பெப்பில் கலைஞர் மாலினி

நன்றி குங்குமம் டாக்டர்

கடற்கரையோ அல்லது பூங்காவிற்கு சென்றால் அங்கு மண்ணில் புதைந்து இருக்கும் கூழாங்கற்கள் மற்றும் சிப்பிகளை சேகரிப்பது எல்லாருடைய வழக்கமாக இருக்கும். இந்தப் பழக்கம் நாளடைவில் மறந்து போய்விடும் அல்லது சேகரிப்பதில் நாட்டம் குறைந்துவிடும். ஆனால் என்னதான் வளர்ந்தாலும் சிப்பி மற்றும் கூழாங்கற்களை சேகரிப்பதில் இவருக்கு இன்னும் ஆர்வம் குறையவில்லை.

ஒரு பெரிய பை நிறைய கூழாங்கற்கள் மற்றும் சிப்பிக்களை சேகரித்து வைப்பது மட்டும் இல்லாமல் அதையே அழகான கலையாக மாற்றி அமைத்துள்ளார் அமெரிக்காவில் வசித்து வரும் மாலினி. வாட்ஸ்சப்பில் தொடர்பு கொண்டவர் பெப்பில் ஆர்ட் மேல் அவருக்கு ஏற்பட்ட மோகத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘பெப்பில் ஆர்ட் வெளிநாடுகளில் பிரபலம். இந்தியாவில் இப்போது பரவலாக பரவி வருகிறது’’ என்று பேசத் துவங்கினார் மாலினி. ‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே கூழாங்கற்கள் மற்றும் வண்ணக்கற்கள் மேல் தனி ஆர்வமுண்டு. வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கற்களை பார்த்தால் போதும், உடனே எடுத்து வைத்துக் கொள்வேன். அப்ப நான் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வீட்டில் மூட்டை மூட்டையா கற்களை சேகரித்து வச்சிருந்தேன். அம்மாக்கும் எனக்கும் இதனாலேயே சண்டை வரும்.

ஒவ்வொரு வருடமும் அவங்க கற்களை தூக்கி போடுவாங்க. நான் சேகரிச்சு வைப்பேன். அப்ப இது போன்ற ஒரு கலை இருக்குன்னு தெரியாது. சின்ன மரத்துண்டைக் கூட விட்டு வைக்கமாட்டேன்’’ என்றவர் படிப்பு முடிந்ததும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

‘‘படிப்பு முடிஞ்சதும் சில காலம் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு திருமணமாகி அமெரிக்கா வந்துட்டேன். இங்க எல்லா வேலையும் நாம தான் செய்யணும். உதவிக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க. இந்த நிலையில் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை நான் மட்டுமே தனியாக பார்த்துக் கொள்ள நேரிட்டது.

வீட்டு வேலை, குழந்தை என எல்லா வேலையும் என் தலையில் விழுந்ததால் ஒரு விதமான எரிச்சல் மற்றும் டிப்ரஷனுக்கு ஆளானேன். இதை போஸ்ட் பிரக்னென்சி டிப்ரஷன்னு சொல்வாங்க. குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வெளியே போக முடியாது.

அப்படியே போனாலும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு தான் போகணும். நினைக்கும் நேரத்தில் ஒரு கடைக்கு கூட போக முடியாது. எல்லா வசதிகள் இருந்தும் நான் மட்டும் தனிமைபடுத்தப்பட்டது போன்ற உணர்வு. எனக்கான வேலையும் இல்லை. இது எல்லாம் சேர்ந்து ஒருவித பயம் என்னை டிப்ரஷனுக்கு தள்ளியது. இந்த நிலை நீடிச்சால் பிரச்னை எனக்கு தான். அதனால் என்னையே நான் மாற்றிக் கொள்ள நினைச்சேன். இந்த கலையின் மேல் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்’’ என்றவர் தான் முதன் முதலில் அமைத்த சிற்பத்தை பற்றி விவரித்தார்.

‘‘இந்த கலையை எப்படி நான் ஆரம்பிச்சேன்னு தெரியல. நான் ரொம்பவே மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். அமெரிக்காவில் எந்த பலனில்லாமல் இருப்பது போன்ற உணர்வு. குழந்தையை பராமரிக்கிறேன். ஆனால் அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதும் செய்யாமல் இருப்பது எனக்கு ரொம்பவே சங்கடமா இருந்தது. படிக்கலாமான்னு பார்த்தால் அதற்கான செலவு அதிகம். என்னடா இப்படி இருக்கோமேன்னு சும்மா இந்தக் கற்களை வச்சு விளையாடிக் கொண்டு இருந்தேன். அப்ப என்னை அறியாமல் ஒரு உருவம் உருவாச்சு.

கணவன், மனைவி கடற்கரையில் அமர்ந்து இருப்பது போல் அழகான சிற்பம் தான் நான் முதன் முதலில் வடித்த சிற்பம். உடனே படம் பிடித்து முகநூலில் பதிவு செய்தேன். நிறைய லைக் வந்ததை பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு வீட்டில் சேகரித்து வைத்து இருந்த கற்கள் மற்றும் சிப்பிகள் கொண்டு ஒரு பறவை இருப்பது போல் வடிவமைச்சேன்.

அதை என் பக்கத்து வீட்டில் இருக்கும் பறவை பிரியருக்கு பரிசாக கொடுத்தேன். காரணம் அவங்க என் வீட்டில் தவறி வந்துவிட்ட ஒரு குஞ்சு பறவையை காப்பாற்றி கொடுத்தார். அவர் அதை பார்த்திட்டு ரொம்பவே நெகிழ்ந்து போனார்’’ என்றவர் தன்னுடைய படைப்பினை அங்குள்ள நூலகத்தில் கண்காட்சியாக வைத்துள்ளார்.

‘‘இதுவரை சுமார் 25க்கும் மேற்பட்ட பெப்பில் சிற்பங்களை வடிவைமச்சு இருப்பேன். எங்க ஏரியாவில் ஒரு நூலகம் உள்ளது. அங்கு இது போன்ற கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் தருவதற்கு ஒரு மாதம் முழுதும் அங்குள்ள கேலரியை இலவசமா தருவாங்க. அதில் நம்முடைய படைப்புகளை வைத்துக் கொள்ளலாம். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின் ‘ஆர்ட் பார் காஸ்’ அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இந்த அமைப்பு இந்தியாவில் வாழும் ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அந்த குழந்தைகளுக்கு என் கலை மூலம் உதவி செய்து வருகிறேன். அது மட்டும் இல்லாமல் அரசு துறை சார்ந்த வேலைக்கு கிராமத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

ஆனால் அதற்கு அவர்களுக்கு முறையான பயிற்சி எடுக்க வசதி இருக்காது. இவர்களுக்காவே ஒரு ஆப்பினை அமைக்க உதவி செய்திருக்கேன். இதன் மூலம் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்துள்ளனர். மற்றொரு தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கு பாட புத்தகம் வாங்கித் தர உதவி செய்து வருகிறேன்’’ என்றவர் அமெரிக்காவில் அவ்வளவு எளிதாக சிப்பிகள் மற்றும் கற்களை சேகரிக்க முடியாதாம்.

‘‘நான் சென்னையில் இருந்த போது மூட்டை மூட்டையா வச்சு இருந்தேன். அம்மா குப்பைய சேர்க்கிறேன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டாங்க. ஆனாலும் நான் இதனை சேகரிப்பதை விடவில்லை. அமெரிக்காவிலும் அந்த பழக்கம் தொடர்ந்தது. ஆனா இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். இவங்க கடற்கரையின் வளத்தை மிகவும் கவனமா பாதுகாத்து வராங்க.

அதனால் கடற்கரையில் இருந்து சிப்பியோ அல்லது கற்களையோ அள்ளிக் கொண்டு வரமுடியாது. ஒன்று இரண்டு வேண்டும் என்றால் எடுத்து வரலாம். மேலும் இது போன்றவற்றை விற்பனைசெய்யும் கடையிலும் சில சமயம் கற்களை வாங்குவேன். அப்படித்தான் ஒரு பாத்திரம் நிறைய சேகரித்து வச்சிருக்கேன்.

ஒவ்வொரு கற்கள் மற்றும் சிப்பிகள் வித்தியாசமானவை. கற்கள் பச்சை, சிகப்பு, மஞ்சள்னு பல நிறங்களில் கிடைக்கும். நான் அதன் அமைப்பை மாற்றி அமைக்க மாட்டேன். அது எப்படி இருக்கோ, அதை கொண்டு என்ன உருவத்தை உருவாக்கலாம்ன்னு தான் யோசிப்பேன். இது ஒரு 3டி கலையும் கூட.

பிரேமில் நாம் ஒட்டிய பிறகு பார்த்தால் 3டி புகைப்படம் பார்ப்பது போல் இருக்கும். தொட்டுப் பார்க்கும் போது அந்த சிப்பி மற்றும் கற்களின்தன்மையை நாம் உணர முடியும். குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு இந்த கலை மூலம் ஒரு உருவத்தை அமைத்து அதன் மூலம் அது என்ன என்று எளிதாக புரிய வைக்க முடியும்.

இதில் பல வகை சிற்பங்களை அமைக்கலாம். ஒரு பெண்ணுடைய முகம் மட்டுமில்லை குடும்பத்தில் உள்ள அனைவரின் உருவங்களையும் சிற்பமாக வடிக்க முடியும். என்ன கொஞ்சம் கற்பனை திறன் வேலை செய்யணும். அப்பதான் எந்த கற்கள் முகம், உடல் மற்றும் கைக்கால்களை அமைக்கலாம்னு யூகிக்க முடியும்’’ என்ற மாலினிக்கு இந்தக் கலையினை பதிவு செய்ய

வேண்டுமாம்.

‘‘இதுவரை இந்தக் கலையை குறித்து யாரும் பதிவு செய்ததில்லை. அதனால் நான் அந்த முயற்சியில் இறங்கி இருக்கேன். இந்த கலையை ஒரு பசில் விளையாட்டாகவும் விளையாடலாம். அதாவது எந்த கல் முகமாக அமைக்கலாம், உடலாக வடிவமைக்கலாம்னு ஒருவரை யோசிக்க வைக்கும். அதே போல் ஆட்டிசம் குழந்தைகளுக்கும் இது ஒரு தெரபியாகவும் செயல்படும் என்பதால் அவங்களுக்காகவே ஆர்ட் தெரபி ஸ்டுடியோ அமைக்கும் எண்ணம் உள்ளது’’ என்று தன் எதிர்கால திட்டத்தினை விவரித்தார் மாலினி.

ப்ரியா

Related Stories: