பணமோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

மீனம்பாக்கம்: பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடி ஓராண்டு தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுபாஷ் லாசர் (38). இவர் மீது பணமோசடி உட்பட சில வழக்குகள் கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் உள்ளன. அவரை போலீசார் தேடியபோது, வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டது தெரிந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் கொடுத்திருந்தனர்.

நேற்று நள்ளிரவு கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த விமானத்தில், சுபாஷ் லாசரும் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவர் கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சுபாஷ் லாசரை வெளியில் விடாமல், குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள், சுபாஷ் லாசரை கைது செய்து அழைத்து செல்ல சென்னைக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: