ஆந்திராவில் பயங்கரம்: இளம்பெண்ணை தாக்கி 3 பேர் கூட்டு பலாத்காரம்

திருமலை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட வருங்கால கணவருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை 3பேர் கும்பல் தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபல்லியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து பேசி நிச்சயம் செய்துள்ளனர். இதையடுத்து இளம்பெண்ணும் அந்த வாலிபரும் அடிக்கடி செல்போனில் பேசுவார்களாம். இந்நிலையில் இருவரும் தனியாக சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 19ம்தேதி இரவு அருகே உள்ள சீதா நகர் பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையில் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம்.

அப்போது அங்கு 3வாலிபர்கள் திடீரென வந்தனர். அவர்கள், பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபரை சரமாரி தாக்கி அவரது கை, கால்களை கட்டினர். பின்னர் இளம்பெண்ணையும் தாக்கிய அந்த கும்பல், அந்த வாலிபரின் கண்ணெதிரே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்த நாட்டு படகில் ஏறி கிருஷ்ணா நதி வழியாக தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணையும், வாலிபரையும் மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தாடேபல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில்தான் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சுச்சரித்தா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வனிதா ஆகியோர் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் அமைச்சர் சுச்சரித்தா நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த சம்பவம் ஒரு கொடூரமான செயல். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தண்டிக்கப்படுவார்கள். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அரசு சார்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: