ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தல்; காரில் 2 டன் செம்மரம் பறிமுதல்: ஒருவர் கைது

திருத்தணி: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 2 டன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு திருத்தணி வழியாக செம்மர கட்டைகள் கடத்திவரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கீழ்கண்டிகை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 2 டன் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த ஒருவர் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து காருடன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டிவந்த நபர், திருத்தணி அடுத்த தாழவேடு பகுதியை சேர்ந்த சரவணன்(26) என்று தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர். 2 டன் செம்மரக் கட்டையை திருத்தணி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர். இவர்களுக்கு செம்மர கட்டைகள் சப்ளை செய்தவர்கள் யார் என்று விசாரிக்கின்றனர்.

Related Stories: