அதிமுக நிர்வாகி வீட்டில் மதுபாட்டில்கள் பறிமுதல்

கூடலூர்: கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்த அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து 176 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டாவது மைல் பகுதியில் ஒருவரது வீட்டில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் விமல்நாதன் என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விமலநாதன் நீலகிரி மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.

அவரது வீட்டில் இருந்த மதுபாட்டில்கள், அவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் என 176 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்து விமலநாதன் தப்பினார். அவரது சகோதரர் புஷ்ப அருண் (34) மற்றும் பிரபாகரன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரையும் கூடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விமலநாதனை தேடி வருகின்றனர். மாஜி கவுன்சிலர் கைது

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள விஷ்ணு திரையரங்கு வீதியில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  

போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மறைவான இடத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, 62 குவார்ட்டர் மது பாட்டில்களை அங்கிருந்து பறிமுதல் செய்த போலீசார், மது விற்பனையில் ஈடுபட்டதாக பவானி, பழைய பஸ்நிலையம் பகுதியைச் சேர்ந்த தன்னாசி (60), மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் (எ) அர்ஜுனன் (51) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில், ஆண்டியப்பன் அதிமுக பிரமுகர் என்பதும், பவானி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>