×

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு பெண் ஆட்சியர்கள்: முதல்வரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு பெண் ஆட்சியர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.கழக ஆட்சியில் பல்பேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி உள்ளிட்ட பல அதிகாரிகள் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு பெண் ஆளுமைகள் பலரையும் நியமனம் செய்துவருகிறது தமிழ்நாடு அரசு. அந்தவகையில் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் முதல் அனைத்து முக்கிய பதவிகளுக்கும் பெண்கள் நியமிக்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சியர்கள், மாவட்ட நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஆட்சியராக விஜயராணி, காஞ்சிபுரம் ஆட்சியராக ஆர்த்தி, அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி, தர்மபுரி ஆட்சியராக திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை ஆட்சியராக லலிதா, நாமக்கல் ஆட்சியராக ஸ்ரேயா சிங், பெரம்பலூர் ஆட்சியராக வெங்கட பிரியா, புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, ராமநாதபுரம் ஆட்சியராக சந்திரகலா, திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன், நீலகிரி ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகுதான் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் முதல் முறையாக இவ்வளவு அதிகமான அளவில் பெண்களை ஆட்சியராக நியமித்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu , Female governors for 11 out of 38 districts in Tamil Nadu: Various parties welcome the announcement of the Chief Minister
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...