தமிழகத்தில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி. யின் விண்ணப்பம் நிராகரிப்பு!: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்..!!

சென்னை: 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி. யின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபட சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். 

சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேரவையில் பேசிக் கொண்டிருக்கும் போது ஹெட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அரசு எவ்விதமான நடவடிக்கை எடுக்கவிருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹெட்ரோ கார்பன் புதிய ஆய்விற்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம்  ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்தது. 

அதேபோல் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹெட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்திற்கு வெளியே உற்பத்தி எடுக்க விண்ணப்பித்தால் அதன் பாதிப்புகளை கண்டறிவதற்காக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். 

அதோடு மட்டுமின்றி அந்த குழு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்ற விளக்கத்தையும் அமைச்சர் கொடுத்திருக்கிறார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் 5 எண்ணெய் கிணறுகளும் அமைப்பதற்கு விண்ணப்பித்திருந்தார்கள். 

அந்த விண்ணப்பமானது நேற்று நிராகரிக்கப்பட்டதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார். மொத்தமாக தமிழகத்தை பொறுத்தவரை மீத்தேன், ஷேல் கேஸ் எடுப்பதற்கான அனுமதியை அரசு அளிக்காது என்பதை உறுதிபட தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: