கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்புகிறது சேலம் வழியே 114 ரயில்கள் இயக்கம்

சேலம் : கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பும் நிலையில், சேலம் வழியே இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 114 ரயில்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக கடந்தாண்டு மார்ச் இறுதியில், பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தவுடன், அதாவது 3 மாதத்திற்கு பின் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கினர். இந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் தற்போது வரை தொடர்ந்துள்ளது.

இருப்பினும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவியதும், பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கிய சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. ஒருசில ரயில்களை மட்டும் இயக்கினர். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாடு, கேரளாவில் மே மாதம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், 200 சிறப்பு ரயில்களை ரத்து செய்தனர். தற்போது, கொரோனா பரவல் குறைந்து, பழையபடி இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதன்காரணமாக சிறப்பு ரயில்களின் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது.

இதன்படி, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் 400 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், முக்கிய வழித்தடமாக சென்னை-சேலம்-கோவை-திருவனந்தபுரம் மார்க்கமும், சென்னை-திருச்சி-மதுரை-நாகர்கோவில் மார்க்கமும் விளங்கி வருகிறது. இந்த இரு மார்க்கங்களிலும் அதிகப்படியான ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. பயணிகளும், கடந்த காலத்தை விட அதிகளவு பயணித்து வருகின்றனர். ஒவ்வொரு சிறப்பு ரயிலிலும் 20 சதவீதம் என பயணிகள் சென்றநிலையில், தற்போது 50 முதல் 60 சதவீத பயணிகள் செல்கின்றனர்.

 சேலம் ரயில்வே கோட்டத்தை பொருத்தளவில் சேலம், கோவை வழியே கேரளாவிற்கு அதிகபடியான ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், வட மாநிலங்களான மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், உ.பி., ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனை பொருத்தளவில் தினமும் 80 ரயில்கள் வந்து, செல்கின்றன. இது தினசரி சிறப்பு ரயில்களாகும். இதுபோக வாராந்திர ரயில்களாக 34 ரயில்கள் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது.

 இதன்மூலம் சேலம் வழியே 114 ரயில்கள் வந்து செல்கிறது. இவற்றில் முக்கிய ரயில்களாக கோவை-சென்னை இன்டர்சிட்டி சிறப்பு ரயில், கோவை-சென்னை சிறப்பு ரயில், மேட்டுப்பாளையம்-சென்னை, ஈரோடு-சென்னை, திருவனந்தபுரம்-சென்னை, எர்ணாகுளம்-பெங்களூரு, மங்களூரு-சென்னை, கொச்சுவேலி-யஸ்வந்த்பூர், நாகர்கோவில்-மும்பை உள்ளிட்ட ரயில்கள் இருக்கின்றன.

இருமார்க்கங்களில் இயங்கும் இந்த ரயில்களில் 90 சதவீத பயணிகள் தற்போது பயணித்து வருகின்றனர். வார இறுதிநாட்களில், அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிடுகின்றன. அதேபோல், சேலம் வழியே வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் 100 சதவீத இருக்கைகள் நிரம்பிவிடுகிறது. அந்த ரயில்களில் இடமில்லாததால், கூடுதல் சிறப்பு ரயில்களை பண்டிகை கால ரயில்களாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து, இயக்கி வருகிறது.

இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால், ரயில்களின் இயக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் வழியே 114 ரயில்கள் செல்கிறது. இவற்றில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சராசரியாக 60 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி ரயில்களில் ஏறி பயணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகிறோம்,’’  என்றனர்

Related Stories: