செந்துறை அருகே அரியாகுளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

*துர்நாற்றம் வீசுவதால் அகற்ற மக்கள் கோரிக்கை

அரியலூர் : செந்துறை அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஏரியில் திடீரென மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நீரை பயன்படுத்த முடியாத நிலையில் இறந்த மீன்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் ஆனந்தவாடி சாலையில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாகுளம் ஏரி உள்ளது.

இந்த ஏரி நீர் மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் உள்ள நீர் விவசாயத்திற்கு மட்டுமின்றி, பொதுமக்கள் குளிக்கவும், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியாகுளம் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது.

இதையறிந்த பொதுமக்கள் தற்போது கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நீரைப் பயன்படுத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்த முடியாமல் போகிறது என கூறுகின்றனர்.

எனவே, ஏரியில் இறந்து கிடக்கும் மீன்களை அகற்ற வேண்டும். இல்லையெனில் நீர் மேலும் கெட்டுவிடும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: