2ம் அலையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம்!: 3வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை...ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: 3வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா 2ம் அலை தீவிரமடைந்ததை தொடர்ந்து பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. 

இதில் பல மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார்கள். கொரோனா 2ம் அலையின் போது தமிழகத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான அடுக்கடுக்கான உத்தரவுகளையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. 

இதற்கு மத்திய, மாநில அரசுகளும் பதில் அளித்தன. இந்த நிலையில், இந்த வழக்கு இன்றும் பட்டியலிடப்பட்டிருந்தது. அச்சமயம் தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

அதேபோல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வாதங்கள் அனைத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. தீவிரமான கொரோனா ஊரடங்கின் போதும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கை இன்று முடித்துவைத்த நீதிபதிகள், 3வது அலை தாக்க எந்தவொரு அறிவியல்பூர்வமான அடிப்படை இல்லை என்றாலும்  கூட, எதிர்காலத்தில் பரவல் அதிகரிக்கும் போது அதை எதிர்கொள்வதற்காக 2ம் அலையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories: