பேச்சுத்திறன் குறைபாட்டை சரி செய்ய முடியும்

நன்றி குங்குமம் டாக்டர்

ஒருவர் எதிரில் உள்ளவரோடு தொடர்பு கொள்ள பேச்சுத்திறன் பயன்படுகிறது. சிறந்த பேச்சாற்றல் உள்ளவர்களால் அதிக நண்பர்களைப் பெற முடியும். பேச்சாற்றல் மிக்கவர்கள் தனது துறையில் உச்ச வளர்ச்சியை எட்ட முடியும். அடுத்தவர் மனதை ஈர்க்கவும் இடம்பிடிக்கவும் பேச்சாற்றலே பயன்படுகிறது. ஒருவர் பேசும் போது உச்சரிப்பு, குரல் வளம், பேசுவதில் உள்ள தொடர்ச்சி, ஏற்ற இறக்கங்கள் மற்றும் அவர்களது மொழித்திறனும் சேர்த்தே ரசிக்கப்படுகிறது. இவற்றில் குறைகள் காணப்படும் போது அந்தப் பேச்சு யாராலும் விரும்பப்படுவதில்லை.

மேலும் பேச்சுக் குறைப்பாட்டினை வைத்தே ஊமையன், திக்குவாயன், செவிடன், உளறுவாயன் என்பது போன்ற பட்டப் பெயர்கள் வைத்து கேலி செய்கின்றனர். இது அவர்களது திறமைகளை மழுங்கடிக்கச் செய்து கேலிக்குரியவர்களாக மாற்றுகிறது. மேலும் இது அவர்களது மனதை புண்படுத்தி வேதனை அளிக்கிறது. ‘பேச்சுத்திறன் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து அதை நம்மால் சரி செய்ய முடியும்’ என்கிறார் பேச்சுத் திறன் பயிற்சியாளரான வாசுகி விஜயகிருஷ்ணன். யாருக்கெல்லாம் பேச்சுக் குறைபாடுகள் ஏற்படும்?

அவற்றுக்கான தீர்வு என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார். ‘‘பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம். பிறவிக் குறைபாடுகளான காது கேளாமை, மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, உதடு மற்றும் அன்னப்பிளவு உச்சரிப்பு ஆகியவையும் ஒருவரது பேச்சுத்திறனை பாதிக்கிறது. பெரியவர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், முகவாதம், திக்குவாய், குரல்வளம் பாதிப்பு, உணவு உட்கொள்வதில் மற்றும் விழுங்குவதில் ஏற்படும் பாதிப்புகளாலும் பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது.

விபத்தில் தலையில் அடிபட்டு பேச்சு மற்றும் மொழித்திறன் பாதிப்புக்குஉள்ளாகவும் வாய்ப்புள்ளது. ஒரு குழந்தை கருவில் உருவாகும்போதிலிருந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களைத் தாக்கும் எந்த ஒரு பிரச்னையாலும் பேச்சுக்குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக, சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு கரு உருவாகும் சமயத்தில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகளும், கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், சத்தான உணவு உட்கொள்ளாமல் இருப்பது,

அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்வது கர்ப்ப காலத்தில் நோய்வாய்ப்படுவது ஆகிய காரணங்களாலும் பேச்சுக்குறைபாடு குழந்தைக்கு ஏற்படலாம். பிரசவத்தின்போது குழந்தைக்கு கொடி சுற்றிப் பிறத்தல், பிறந்த உடன் குழந்தை அழாமல் இருத்தல், மேலும் பிரசவ சமயத்தில் ஏற்படும் எந்த விபத்தும் குழந்தையை பாதிக்கும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் காய்ச்சல், வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு ஆகிய அனைத்தும் பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடுகளுக்குக் காரணம் ஆகும்.

குழந்தை வளரும் பருவத்தில் காதில் ஏற்படும் வலி, சீழ் வடிதல் ஆகியவற்றையும் கூட கவனமாகக் கையாள வேண்டும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு ஏற்படும் மொழித்திறன் குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ஸ்பீச் தெரபி கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களது பேச்சுக் குறைபாட்டினை சரி செய்து இந்த சமூகத்தில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்த்தெடுக்க முடியும்.  

- கே.கீதா

× RELATED உடலை பாதுகாக்கும் பருப்புகள்