ஆர்மீனியாவில் ஆட்சியை தக்க வைத்தார் பிரதமர் பாஷின்யன்!: நாடு முழுவதும் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

யெரெவன்: ஆர்மீனியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நிகோல் பாஷின்யன் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. கடந்த 20ம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நிகோல் பாஷின்யனின் சிவில் ஒப்பந்த கட்சி 53.9 விழுக்காடு வாக்குகளை பெற்று வாகை சூடியதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

முன்னாள் ஆர்மீனியா அதிபர் ராபர் கோச்சர்யான் கூட்டணிக்கு 21 விழுக்காடு வாக்குகளே கிடைத்துள்ளன. ஆர்மீனியாவின் பிரதமர் நிகோல் பாஷின்யன் ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். தலைநகர் யெரெவனில் நடைபெற்ற வெற்றி பேரணியில் பங்கேற்ற பிரதமர் நிகோல் பாஷின்யன், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியை வழங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஆர்மீனியாவை நல்வழிப்படுத்த மக்கள் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கின்றனர். இது உங்களால் கிடைத்த வெற்றி. எங்கள் நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். நாகர்னோ, காராப்பக் பகுதி தொடர்பாக அண்டை நாடான அஜர்பைஜானுடன் ஆர்மீனியாவுக்கு 25 ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. 

இது தொடர்பாக அஜர்பைஜானுடன் ஆர்மீனியா பிரதமர் பாஷின்யன்  அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதால் இருநாட்டு எல்லையிலும் தற்போது போர் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அமைதி நடவடிக்கையின் எதிரொலியாகவே ஆர்மீனியாவில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் நிகோல் பாஷின்யன் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

>