எச்.ராஜாவை கண்டித்து சிவகங்கை மாவட்ட பாஜ நிர்வாகிகள் ராஜினாமா: தேர்தல் தோல்விக்கு காரணம் என மிரட்டுவதாக புகார்

காரைக்குடி:  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இதில் எச்.ராஜா படுதோல்வியடைந்தார். இதையடுத்து தனது தோல்விக்கு மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என, எச்.ராஜா குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட பாஜவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் காரைக்குடி நகர பாஜ தலைவர் சந்திரன் தலைமைக்கு நேற்று ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதில், “எச்.ராஜா செய்த தவறுகளை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.

மேலும் மாவட்ட துணை தலைவர் நாராயணன் பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார். எச்.ராஜா மருமகன் சூர்யா என்ற சூரியநாராயணன் என்னை பல்வேறு நபர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டுகிறார். இதனால் எனக்கும் எனது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. பதவியில் நீடித்தால் என்னை கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். எனவே எனது பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ, என்னுடன் இணைந்து பணியாற்றிய சக கட்சி நிர்வாகிகளின் உயிருக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச்.ராஜா, அவரது மருமகன் சூர்யா, மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர்தான் பொறுப்பு’’என தெரிவித்துள்ளார்.

 இதேபோல சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆட்டோ பாலா என்பவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதவிர மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: