×

யூரோ கோப்பை கால்பந்து; இத்தாலி ஹாட்ரிக் வெற்றி: தோற்றாலும் வேல்ஸ் முன்னேற்றம்

பாக: யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் இத்தாலி அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அந்த அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்ற வேல்ஸ் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஏ பிரிவில் இத்தாலி - வேல்ஸ் அணிகள் மோதிய லீக் ஆட்டம் ரோம் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இத்தாலி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிட்டதால், முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. டிரா செய்தாலே அடுத்த சுற்று வாய்ப்பு என்ற இலக்கில் வேல்ஸ் விளையாடியது. புதுமுக வீரர்கள் என்றாலும் ஆட்டம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை சுவைத்தது. அந்த அணியின் மாட்டியோ பெஸினா 39வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார். இத்தாலி அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் முதல் இடம் பிடித்தது.

இதே பிரிவில், உஸ்பெஸ்கிஸ்தானின் பாகு நகரில்  நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. அந்த அணியின் செபரோவிச் 6வது நிமிடத்திலேயே அமர்க்களமாக கோல் அடித்து கணக்கை தொடங்கினார். ஷக்கிரி 26வது மற்றும் 68வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்த சுவிஸ் அணி 3-1 என வெற்றியை வசப்படுத்தியது. துருக்கி அணிக்கு காஹ்வெசி 62வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார். வேல்ஸ், சுவிஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் வேல்ஸ் 2வது இடம் பிடித்தது. அதனால் இத்தாலி, வேல்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. கடைசி 2 இடங்களை பிடித்த சுவிஸ், துருக்கி அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

Tags : Euro Cup ,Italy ,Wales , Euro Cup, football, Italy hat-trick win
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்