சுயசக்தி விருதுகள்... வாருங்கள் விருதினை அள்ளுங்கள்...

நன்றி குங்குமம் டாக்டர்

வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் ஆண்கள் எளிதாக தங்களின் இலக்கை அடைந்துவிடுகிறார்கள். பெண்கள் பல தடைகளை தாண்டித்தான் அவர்களுக்கான இலக்கை அடைய வேண்டி இருக்கிறது.

இப்போது பெண்களும் பல துறைகளில் முன்னேறி வருகிறார்கள். ஒரு பெண்ணுடைய வளர்ச்சியை நாம் உதாரணமாக சொல்லும் பொழுது, ஒரு கல்பனா சாவ்லா, பிரியங்கா காந்தி, ஐஸ்வர்யா ராய், சானியா நெஹ்வால் போன்றவர்களைதான் நாம் சுட்டிக் காண்பிக்கிறோம்.

ஆனால் உண்மையில் பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிகளும் சாதனைப் பெண்கள் தான். அவர்கள் ஒரு சுயம்பாக தான் இன்றும் திகழ்கிறார்கள். இதில் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த திறமைகளைக் கொண்டு அதன் மூலம் தங்களுக்கான ஒரு வருமானத்தையோ அல்லது அடையாளத்தையோ ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கான ஒரு உலகத்தில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். லட்சக்கணக்கில் சம்பாதிக்காவிட்டாலும், தங்களுக்காகவும் தங்களின் குடும்பத்திற்காகவும் இவர்கள் உழைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களை கவுரவிப்பதற்காகவே துவங்கப்பட்டதுதான் சுயசக்தி விருதுகள்.

பிராண்ட் அவதார் நிறுவனர் ஹேமச்சந்திரன் மற்றும் நேச்சுரல்ஸ் அழகு நிலையம் நிறுவனர் குமரவேல் இருவரும் இணைந்து கடந்த இரண்டு வருடமாக சுயதொழில் செய்து வரும் பெண்களை கவுரவித்து விருது வழங்கி வருகின்றனர். இந்த வருடம் ‘குங்குமம் தோழி’ தங்களின் வாசகர்களுக்காக இவர்களுடன் இணைந்து இந்த விருதினை வழங்க உள்ளது.  

விருதினை பெறுவதற்கு சுயதொழில் செய்து வரும் அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதில் பங்கு பெறுவதற்கு ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சிறிய அளவில் ஊறுகாய் அல்லது ஆரத்தி தட்டு போன்ற தொழில் செய்து வரும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொருவரின் திறமைகளையும் ஆய்வு செய்வதற்கு 13 நடுவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

விருது பெற்றவர்கள் மேலும் தங்களின் தொழிலில் வளர்ச்சியடைவதற்கு சிறப்பு ஆலோசகர்கள் கொண்ட குழுவினர் அவர்களை வழிநடத்தவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல், இவர்கள் தயாரிக்கும் பொருட்களை மற்றவர்களுக்கு சந்தைப்படுத்துவதற்காக ‘ஹோம்பிரனர் சர்கில்’ என்ற குழு அமைக்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் அவர்கள் தங்களின் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்யலாம்.

நம் நாட்டின் அடுத்த தலைமுறையினர் மாணவர்கள் தான். இந்த காலத்து மாணவர்கள் தங்களின் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர். அதன் மூலம் சொந்தமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் ஹோம்பிரனர் விருது - ஸ்டூடன்ட்ஸ் எடிஷன் மூலம் தங்களின் தொழில் சார்ந்த எண்ணங்களை பதிவு செய்யலாம். சிறந்த ஐடியாக்கள் தேர்வு செய்யப்படும்.

இந்தாண்டுக்கான சுயசக்தி விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான துவக்க விழா கடந்த வாரம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் துவங்கி வைத்தார். www.homepreneurawards.com அல்லது www.suyasakthiawards.com என்ற இணையதளத்தில் உங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 23ம் தேதி நடுவர்கள் குழு தலைமையில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி விருது வழங்கப்படும்.

ஒரு பெண்ணால் மட்டுமே அவளின் தலைமுறையினரை சிறந்த முறையில் நல்வழிப்படுத்தி நடத்த முடியும். ‘குங்குமம் தோழி’ வாசகிகள் ஒவ்வொருவரும் திறமையானவர்கள் தான். தோழிகளே, இந்த விருது உங்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. பிராண்ட் அவதார், நேச்சுரல்ஸ் மற்றும் குங்குமம் தோழி இணைந்து நடத்தும் சுயசக்தி விருதுகளில் உங்களின் திறமையை வெளிப்படுத்துங்கள். விருதினை வெல்லுங்கள்.

ரித்திகா

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: