பெற்றோரை அழைத்து வழங்க ஏற்பாடு: மாணவர்களுக்கு படிப்படியாக பாடப்புத்தகம் விநியோகம்

நெல்லை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடிந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று தயாரித்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனிடையே புதிய கல்வியாண்டில் பிளஸ்2 மாணவர்களுக்கும் பிற மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என வகுப்பு வாரியாக பாடங்களுக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த அட்டவணைப்படி சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தொலைக்காட்சி மூலமும் தங்கள் பாடங்களை கற்கலாம். ஆசிரியர்களும் அவர்களது வகுப்பு நேரத்தில் இந்த தொலைக்காட்சி கல்வியை பார்வையிட்டு தங்களது மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொலைபேசி மூலம் விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இந்த வாரம் முதல் மாணவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெற்றோரை மட்டும் பள்ளிக்கு அழைத்து பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும். தொடர்ந்து பிற வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: