இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து விவசாயி அசத்தல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பூவந்தி கிராமத்தில் பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்து விவசாயி அசத்தி வருகிறார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, வெள்ளக்கட்டை, தூயமல்லி போன்றவைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி பகுதியில் விவசாயி ஒருவர் தூய்மல்லி நெல் பயிரிட்டுள்ளார். இவை நல்ல முறையில் விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இதுகுறித்து விவசாயி விஜய கிருஷ்ணன் கூறுகையில், ‘பாரம்பரிய நெல் ரக ங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்  பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி என்ற விதையை சேலம் பகுதியிலிருந்து 5 கிலோ வாங்கி வந்து நாற்றாங்கால் அமைத்தேன்.  10வது நாள் நாற்றாங்கலில் நாற்றை பறித்து 25 செ.மீ இடைவெளிக்கு ஒரு நாற்று வீதம் மார்க்கர் உருளை மூலம் இரண்டரை ஏக்கரில் நடவு செய்தேன்.

ரசாயன உரமோ, ரசாயன பூச்சி மருந்துகளோ பயன்படுத்தவில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பரிந்துரை செய்த சுபாஷ் பலேக்கர் முறைப்படி ரசாயன கலப்பு இன்றி ஜீவாமிர்த கரைசல், ஐந்திலை கசாயம்,  வேப்பங்கொட்டை கரைசல், வெள்ளைப் பூண்டு கரைசல் போன்ற இயற்கை உர கரைசலை பயன்படுத்னேன். நடவு செய்த நாளில் இருந்து 130வது நாளில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த சாகுபடிக்கு செலவு குறைவு. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய உள்ளேன். இது போன்று பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories:

>