டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதால் இந்தியாவின் அந்நிய முதலீட்டிற்கு ஆபத்து ஏற்படுமா?: மத்திய நிதியமைச்சகம் கவலையடைந்துள்ளதாக தகவல்

புதுடெல்லி: டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதால், இந்தியாவின் அந்நிய முதலீட்டிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் மத்திய நிதி அமைச்சகம் கவலை அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிகள் சுதந்திர இந்தியாவுக்கு முன் நாட்டின் பொருளாதாரத்தை அவர்களின் கட்டுக்குள் வைத்திருந்தது போல், தற்போது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக அமெரிக்க நிறுவனங்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தங்களது வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றன. மேலும், அவற்றின் வணிக நலன் சார்ந்த விஷயங்களுக்குள் நம்பை இழுத்து செல்கின்றன. இவ்வாறு வணிகம் சார்ந்த தகவல்கள், விளம்பரங்கள் மூலம் அவர்கள் அதிக லாபம் அடைந்தாலும் கூட, சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்னைக்களுக்கும் காரணமாக சமூக ஊடகங்கள் மாறிவருகின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆளும் அரசுகள் மட்டுமின்றி, சமூகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் கருவியாகவும் சமூக ஊடகங்கள் உருவெடுத்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், டுவிட்டர் தவிர மற்ற சமூக ஊடகங்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளன.

நிலைமை இவ்வாறு இருக்க, இதுபோன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதால் அந்நிய முதலீட்டை நாட்டிற்குள் கொண்டு வருவதில், பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் பரபரப்பட்டு வருகின்றன. இந்தியாவை காட்டிலும், சீனாவில் நடக்கும் தகவல்களை வெளியிடுவதில் அதிகளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அந்த நாடு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இன்று சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது அதிபராக இருந்த டிரம்ப், சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால், அவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அந்த நிறுவனம் தனது வணிக நலன்களை மேம்படுத்த இதுபோன்று செயலை செய்ததா? அல்லது சமூக பொறுப்புடன் டிரம்புக்கு எதிராக முடிவுகளை எடுத்ததா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்தியாவை பொறுத்தமட்டில் புதிய விதிகளின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து விளக்கமளிக்க அல்லது நடவடிக்கை எடுக்க நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சமூக ஊடகங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக அரசிடம் ஒப்படைப்பது நல்லதல்ல என்றும் கூறுகின்றனர்.

சீனாவின் வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக வெளியான செய்தியை, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிட அந்நாடு தடுத்ததாக கூறப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம், வணிக நோக்கம், கட்டுப்பாடுகளை மீறி தகவல்களை பரப்புதல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகாண இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூன்று விதமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகையில், ‘முதலாவதாக, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும், இந்தியாவில் தங்கள் பிரிவை அமைக்க வேண்டும். அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியாவில் இருந்தே மேற்கொள்ள வேண்டும். இந்த நிறுவனங்களின் நிர்வாக அமைப்பில் இருப்பவர்களில் ஒருவர், அரசின் பிரதிநிதியாக நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்க வேண்டும். இந்த பிரதிநிதிகள் மூலம் சமூக ஊடகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

இரண்டாவதாக, பெரிய சமூக ஊடக நிறுவனங்களை பிரிக்க வேண்டும்.

உதாரணமாக, இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சமூக ஊடக தளத்தை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்க வேண்டும். மூன்றாவதாக, சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள இந்தியர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்காக உழைக்கின்றனர். அவர்கள், சொந்தமாக சமூக ஊடகங்களை உருவாக்க நிதி சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உள்நாட்டில் இருந்து சர்வதேச தளங்களை உருவாக்க முடியும். வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவது மூலம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலைமை மோசமடையும் என்றோ, அந்நிய முதலீடு குறையும் என்றோ கூறப்படுவதை ஏற்கமுடியாது. ஆனால், மத்திய நிதி அமைச்சகம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை கண்டு அச்சத்தில் உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில், சமூக ஊடகங்களால் ஏற்படும் தாக்கத்தை ஒவ்வொரு நாடும் பலவிதமான முறையில் இன்று எதிர்கொண்டு வருகின்றன. அதனால், அரசின் கொள்கை முடிவுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது’ என்று அவர்கள் கூறினர்.

Related Stories: