மெகா முகாம் நடத்தி சாதனை: ஆந்திராவில் ஒரே நாளில் 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி: நாடு முழுவதும் 30 கோடியை நெருங்கியது

ஐதராபாத்: ஆந்திராவில் மெகா முகாம் நடத்தப்பட்டதில் இதுவரை இல்லாத வகையில் 13.45 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநேரம், நாடு முழுவதும் இதுவரை கிட்டதிட்ட 30 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. நாடு முழுவம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை போட்ட மாநிலமாக ஆந்திரா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, 13,45,004 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் நேற்று போடப்பட்ட மொத்த தினசரி தடுப்பூசியில், இது 50 சதவீதம் ஆகும். ஆந்திராவில், ஏற்கனவே தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்று வரை ஒரு கோடியைத் தாண்டியது.

கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டினம் மற்றும் குண்டூர் மாவட்டங்கள் தடுப்பூசி போடுவதில் முன்னணியில் உள்ளன. ஆந்திராவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், 13 மாவட்டங்களில் உள்ள 2,000 மையங்களில் காலை 6 மணிக்கு தொடங்கிய இரவு 9 மணி வரை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை, 29.10 கோடிக்கும் அதிகமான (29,10,54,050) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு  இலவசமாக வழங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 26,04,19,412 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.06 கோடி (3,06,34,638) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 24,53,080 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: